Chandrababu Naidu: சந்திரபாபு நாயுடு கலந்துகொண்ட கூட்டத்தில் மோதல்...போலீசார் வாகனங்களுக்கு தீ வைப்பு..ஆந்திராவில் பரபரப்பு
தெலுங்கு தேசம் - ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பதற்றத்தை உண்டாக்கியது.
ஆந்திரப் பிரதேசம் அன்னமய்யா மாவட்டத்துக்கு அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு சென்றபோது, தெலுங்கு தேசம் - ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பதற்றத்தை உண்டாக்கியது. மோதலின் உச்சக்கட்டமாக, போலீசார் வாகங்களுக்கு தீ வைக்கப்பட்டது. கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
சந்திரபாபு நாயுடு கலந்து கொண்ட கூட்டத்தில் மோதல்:
இதனால், அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள அங்கல்லு கிராமம் போர்களமாக மாறியது. தெலுங்கு தேச கட்சி தலைவரான சந்திரபாபு அப்பகுதியில் சுற்றுபயணம் மேற்கொள்ள இருந்தார். இந்த கூட்டத்தில் பங்கேற்க தெலுங்கு தேச கட்சியினர் அங்கு திரண்டனர். அங்கு வந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர், 'சந்திரபாபு கோ பாக்' என முழக்கம் எழுப்பினர்.
இதற்கு எதிராக தெலுங்கு தேச கட்சியினரும் கோஷம் எழுப்பினர். இதில் இரு தரப்பினரும் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர். போலீசாரின் பஸ், ஜீப் உள்ளிட்ட வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இதற்கிடையே, காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு சந்திரபாபு ஆறுதல் கூறினார். ஆளும் கட்சியினரும் இணைந்த போலீசார், தெலுங்கு தேசம் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியதாக அவர் குற்றம்சாட்டினார். வெடிகுண்டுகளுக்கே தான் பயப்படுவதில்லை என்றும் கல்லுக்கு பயப்படுவேனா என தெரிவித்துள்ளார்.
காவல்துறையை வைத்துக்கொண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் அரசியல் செய்வதாக சந்திரபாபு கடும் விமர்சனம் செய்தார்.
இதனால், அன்னமையா மாவட்டத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
ஆந்திராவில் உச்சக்கட்ட பதற்றம்:
சம்பவம் குறித்து எடுத்துரைத்த சித்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் ரிஷாந்த் ரெட்டி, "பொங்கனூர் செல்லும் வழியில் போலீசார் மீது கல் வீச்சு நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் டிஎஸ்பி உட்பட 20க்கும் மேற்பட்ட போலீசார் தாக்கப்பட்டனர். இன்று காலை அன்னமய்யா மாவட்டம் முலகலசெருவில் நடைபெற்ற பேரணியில் சந்திரபாபு நாயுடு தெரிவித்த கருத்தின் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தம்பள்ளேபள்ளி எம்.எல்.ஏ.வை ராவணன் என்று அவர் கடுமையாக விமர்சித்தார். சந்திரபாபு தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சித்தூர் மாவட்டம் அங்கல்லுவில் பொதுக்கூட்டத்திற்கு சந்திரபாபு சென்று கொண்டிருந்தபோது, ஒய்எஸ்ஆர்சிபி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் தெலுங்கு தேசம் கட்சியினர் ஒய்எஸ்ஆர்சிபி கட்சியினர் மீது கற்களை வீசினர். இந்த சம்பவத்தில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தெலுங்கு தேச கட்சியினர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தை அடைந்ததும், தெலுங்கு தேச கட்சியினரை மீண்டும் தூண்டிவிட்ட சந்திரபாபு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மீதும் காவல்துறையினர் மீதும் தாக்க வைத்தார்.
டிஎஸ்பிக்கு எதிராக தரக்குறைவான கருத்துகளை கூறி அவரை அவமதித்துள்ளார். இதனால், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மீது தெலுங்கு தேசம் கட்சியினர் கற்களை வீசினர். இதனால், அவர்களில் பலர் காயமடைந்தனர்" என்றார்.