Telangana Tribal: டீசல் இல்லாமல் நின்றுபோன ஆம்புலன்ஸ்.. 4 மணிநேரம் சாலையில் தவித்த கர்ப்பிணி.. திக் திக் நிமிடங்கள்
டீசல் இல்லாத காரணத்தால் சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் செல்ல முடியவில்லை என்ற தகவலுக்கும் மாவட்ட ஆட்சியர் மறுப்பு தெரிவித்தார்.
தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் தொலைதூரப் பகுதியில் உள்ள சாலையோரத்தில் கர்ப்பிணி ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து, அவரை ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஓடைக்கு அப்பால் அழைத்து செல்லப்படும்போது, அவரை ஏற்றி செல்ல கொண்ட வரப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் டீசல் இல்லாமல் நின்றுபோனது. இதற்கிடையே, சாலையிலேயே அவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
நான்கு மணிநேரம் சாலையில் தவித்த பழங்குடி பெண்:
ஊரின் ஒதுக்குப்புறத்தில் அமைந்துள்ள பெம்பி மண்டலத்தின் துளசிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் கங்காமணி. இவர், பிரசவ வலியால் பாதிக்கப்பட்டு, நான்கு மணிநேரம் அங்கேயே சிக்கித் தவித்துள்ளார். பின்னர், சாலையோரத்தில் தனது ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.
சம்பவத்தை விவரித்த கங்காமணியின் கணவர், "என் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்ட போது, நாங்கள் ஆம்புலன்சை அழைத்தோம். ஆனால், சாலை வசதி இல்லாததால், ஆம்புலன்ஸ் செல்ல முடியவில்லை. கிராம மக்களின் உதவியுடன் தோத்தி ஓடையைக் கடந்தோம். ஆனால், அந்த இடத்திற்கு கூட ஆம்புலன்ஸால் வர முடியவில்லை. ஏனெனில், அதில் டீசல் தீர்ந்து விட்டது.
கூகுள் பே மூலம் டீசலுக்கு 500 ரூபாய் அனுப்பினோம். ஆனால், வாகனம் வரவில்லை. சாலையிலேயே குழந்தை பிறந்தது. இதையடுத்து, 108 ஆம்புலன்ஸில் வந்த மருத்துவ பணியாளர்கள், தொப்புள் கொடியை அறுத்து, அந்தப் பெண்ணையும், பிறந்த குழந்தையையும் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். குழந்தை மற்றும் தாய் இருவரும் தற்போது நலமாக உள்ளனர்" என்றார்.
சாலை வசதி இல்லாத கிராமம்:
இதுகுறித்து நிர்மல் மாவட்ட ஆட்சியர் வருண் ரெட்டி கூறுகையில், "குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தேதி செப்டம்பர் 22 ஆகும்.
பொதுவாக எளிதில் அணுக முடியாத, போக்குவரத்து வசதி இல்லாத தொலைதூரப் பகுதிகளில், கர்ப்பிணிப் பெண்களை சில நாட்களுக்கு முன்பே மருத்துவமனைக்கு அழைத்து வந்து விடுவோம். ஆனால், எதிர்பார்த்த பிரசவ தேதிக்கு கிட்டத்தட்ட நான்கு வாரங்கள் முன்னதாகவே குழந்தை பிறந்துள்ளது" என்றார்.
டீசல் இல்லாத காரணத்தால் சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் செல்ல முடியவில்லை என்ற தகவலுக்கும் மாவட்ட ஆட்சியர் மறுப்பு தெரிவித்தார். இதுகுறித்து விளக்கம் அளித்த அவர், "ஆம்புலன்ஸ் அந்த இடத்திற்கு சரியான நேரத்தில் சென்றது. ஆனால், அவருக்கு ஏற்கனவே பிரசவ வலி இருந்ததால், அவரை கொண்டு செல்லவில்லை. அங்கேயே குழந்தையை பிரசவிக்க முடிவு செய்தனர். தற்போது கானாபூரில் உள்ள சமூக நல மையத்தில் குழந்தையும் தாயும் நலமாக உள்ளனர்" என்றார்.
கடந்த ஆண்டு வெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் துளசிப்பேட்டை கிராமத்திற்கு சாலை இணைப்பு இல்லை என ஒப்பு கொண்ட மாவட்ட ஆட்சியர், புதிய பாலம் கட்ட டெண்டர் கோரியுள்ளதாகவும் ஆனால் இதுவரை யாரும் பதிலளிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.