(Source: ECI/ABP News/ABP Majha)
Crime: ராகிங் கொடுமை..! தற்கொலை செய்து கொண்ட முதுகலை மருத்துவ மாணவி - நடந்தது என்ன?
பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் ராகிங் கொடுமைக்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளே அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
ஒரு காலத்தில் ராகிங் கொடுமை உச்சக்கட்டமாக இருந்தது. கல்லூரி மாணவ, மாணவிகள் ராகிங் கொடுமை காரணமாக அதிக அளவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பிரச்னையாக இருந்தது. ஆனால், பின்னர், மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக அது குறைந்தது.
இருந்தபோதிலும், அவ்வப்போது ராகிங் கொடுமைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக, சாதிய பாகுபாடு காரணமாக மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தற்போது அதிகரித்துள்ளது. நாட்டின் முன்னணி கல்வி நிலையமாக இருக்கும் ஐஐடியில் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்வது சமீப காலமாக அதிகரித்துள்ளது.
தொடரும் தற்கொலைகள்:
குறிப்பாக, ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளே இதனால் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அதன் தொடர்ச்சியாக, ஐஐடி பம்பாயில் தலித் சமூகத்தை சேர்ந்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாட்டை உலக்கியது.
இந்நிலையில், காகடியா மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு முதுகலை மருத்துவ மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தற்கொலைக்கு முயற்சி செய்த மாணவி மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால், நான்கு நாட்களுக்குப் பிறகு நேற்று இரவு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "காகடியா மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் 26 வயதான ப்ரீத்தி, சீனியர் மாணவரின் துன்புறுத்தலால் புதன்கிழமை தற்கொலைக்கு முயன்றார். எம்.ஜி.எம். மருத்துவமனையில் இரவு ஷிப்டில் பணிபுரிந்துவிட்டு மயக்கமடைந்த அவர் ஆபத்தான நிலையில் ஹைதராபாத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
சாதிய பாகுபாடு காரணமா?
அவரது தந்தையின் புகாரின் பேரில், இரண்டாம் ஆண்டு முதுகலை பட்டதாரி மாணவன் முகமது அலி சைஃப் கைது செய்யப்பட்டார். ராகிங், தற்கொலைக்குத் தூண்டுதல், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் துன்புறுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது"
இதுகுறித்து வாரங்கல் காவல்துறை ஆணையர் ரங்கநாத் கூறுகையில், "பாதிக்கப்பட்ட மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரின் வாட்ஸ்அப் உரையாடல்கள் ராகிங் நடந்திருப்பதை உறுதி செய்துள்ளன" என்றார்.
இதுகுறித்து மாணவியின் தந்தை நரேந்தர் கூறுகையில், "மூத்த மாணவன் மீது கல்லூரி மற்றும் மருத்துவமனை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றார்.
உயிரிழந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஹைதராபாத்தின் நிம்ஸில் இருந்து கொண்டு செல்லவும், பின்னர் இறுதிச் சடங்குகளுக்காக அவரது சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியின சங்கங்கள்:
ஹைதராபாத்தில் உள்ள நிம்ஸ், காகதியா மருத்துவக் கல்லூரி மற்றும் வாரங்கலில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனை முன்பு பழங்குடியினர் சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ப்ரீத்தியை மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளார். அவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை தீர்வு அல்ல:
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050