எலி கடித்து இதய நோயாளி உயிரிழப்பு.. ஐசியூவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..
தெலுங்கானாவில் உள்ள மிகவும் மதிப்புமிக்க அரசு மருத்துவமனைகளில் ஒன்றான எம்ஜிஎம் மருத்துவமனையின் நிலை குறித்து நோயாளிகளும் பொதுமக்களும் ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
மருத்துவமனை ஐசியூவில் இதய நோயாளி எலி கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தெலுங்கானாவில் நடந்துள்ளது.
தெலுங்கானாவின் வாரங்கலில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையின் சுவாச தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்ரீநிவாஸ், எலிகளால் கடிக்கப்பட்டு ரத்தப்போக்கு ஏற்பட்டு, பின்னர் ஹைதராபாத் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் நேற்றிரவு நள்ளிரவுக்குப் பிறகு உயிரிழந்தார்.
இதுகுறித்து நிஜாம்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸின் இயக்குனர் டாக்டர் கே.மனோகர் கூறுகையில், “ஸ்ரீனிவாஸுக்கு நாள்பட்ட மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவரது கல்லீரல் கணையம் மற்றும் சிறுநீரகங்கள் மோசமாக பாதிக்கப்பட்டன. ஏற்கனவே வென்டிலேட்டரில் இருந்த அவர், இதற்கு முன் இரண்டு முறை மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். நிம்ஸ் மருத்துவமனை செல்லும் வழியில் கூட அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, நாடித் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் மிகவும் மோசமாக இருந்தது. இந்தச் சிக்கல்களால் மரணம் நிகழ்ந்தது. எலி கடித்ததால் அல்ல” என்று கூறினார்.
இருப்பினும், தெலுங்கானாவில் உள்ள மிகவும் மதிப்புமிக்க அரசு மருத்துவமனைகளில் ஒன்றான எம்ஜிஎம் மருத்துவமனையின் நிலை குறித்து நோயாளிகளும் பொதுமக்களும் ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
ஸ்ரீனிவாஸின் சகோதரர் ஸ்ரீகாந்த், மார்ச் 30ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறினார். இதுகுறித்து அவர், "இது எங்கள் தலைவிதி என்று நாங்கள் நினைத்தோம், இதைத் தவிர வேறு வழியில்லை, ஆனால் இந்த முறை என் சகோதரனை எலிகள் கடித்தபோது, அவருக்கு மோசமாக ரத்தம் வந்தது. படுக்கையில் ரத்தம் இருந்தது. அதனால் புகார் செய்தேன்” என்றார்.
அதிர்ச்சிகரமான சம்பவத்தைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சை துறைத் தலைவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். மருத்துவமனை கண்காணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
மருத்துவமனையை பார்வையிட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் இ.தயாகர், சுகாதாரத்திற்கு காரணமான ஒப்பந்ததாரர் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.
வடிகால் பழுது ஏற்பட்டதால், ஐசியூவில் எலி தொல்லை ஏற்பட்டுள்ளதாக நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் கூறுகின்றனர். எலி கடித்தல் பொதுவானவை என்று அவர்கள் கூறினர். சில நிமிடங்கள் கூட விழிப்புடன் இல்லாவிட்டால் எலிகள் அழிவை ஏற்படுத்தும் என பணியில் இருந்த செவிலியர் ஒருவர் தெரிவித்தார். வடிகால் பணிகள் சீரமைக்கப்பட்டு வருவதால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்