Container school: அனுமதி மறுத்த வனத்துறை - கன்டெய்னரை பள்ளியாக மாற்றிய மாவட்ட ஆட்சியர் - தெலங்கானாவில் அசத்தல்
Telangana container school: தெலங்கானா கண்டெய்னரை கொண்டு உருவாக்கப்பட்ட பள்ளியை, அமைச்சர் சீதக்கா திறந்து வைத்தார்.
Telangana container school: தெலங்கானா மாநிலம் முலுகு பகுதியில் கட்டடம் கட்ட வனத்துறை அனுமதி மறுத்த நிலையில், மாவட்ட ஆட்சியர் கன்டெய்னரை கட்டிடமாக மாற்றியுள்ளார்.
”கன்டெய்னர்” பள்ளி
தெலங்கானா மாநிலத்தின் முதல் 'கன்டெய்னர்' பள்ளியை, அம்மாநில பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சர் தனாசரி அனசுயா (சீதக்கா) செவ்வாய்கிழமை திறந்து வைத்தார். கன்னைகுடெம் மண்டலத்தில் உள்ள, கந்தனப்பள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட, தொலைதூர குக்கிராமமான, பங்காருபள்ளியில் இந்த பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது வனப்பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் உள்கட்டமைப்பு சவால்களை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பழங்குடியின குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகவும் இது கருதப்படுகிறது.
கன்டெய்னர் பள்ளி உருவானது எப்படி?
வனப்பகுதிகளில் நிரந்தர கட்டமைப்புகளை அமைக்க வன விதிகள் அனுமதிக்காததால், அந்த பகுதியில் வசிக்கும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி கற்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் டி.எஸ்.திவாகரன், மாவட்ட ஆட்சியர் நிதியிலிருந்து ரூ.13.50 லட்சம் ஒதுக்கீடு செய்தார். அதன் மூலம் கன்டெய்னர் பள்ளி அமைக்கப்பட்டது.
Government school in a Container at Bangaru Palli, Kannayigudem Mandal in Mulugu was inaugurated.
— Naveena (@TheNaveena) September 17, 2024
School was run in a hut and in neglected state. So this project with school in container was taken up at cost of ₹13.5 lakh
Minister Seethakka said that the use of container… pic.twitter.com/ctBqbMWtRD
மாநிலத்தில் கன்டெய்னரில் அரசுப் பள்ளி நிறுவப்படுவது இதுவே முதல் நிகழ்வாகும். கன்டெய்னர் பள்ளி 25 அடி அகலமும் 25 அடி நீளமும் கொண்டது. இதில் 12 இரட்டை மேசைகள் உள்ளன. அதோடு, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு என 3 நாற்காலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மாநிலத்தில் கன்டெய்னர் கடைகள் மற்றும் வீடுகள் கட்டப்பட்டு வந்தாலும், அரசு பள்ளியாக மாற்றப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
திட்டத்தை விரிவுபடுத்த முடிவு:
நிரந்தரக் கட்டிடங்கள் கட்ட முடியாத இரண்டு அல்லது மூன்று இடங்களில், இதுபோன்ற கன்டெய்னர் பள்ளிகளை அமைக்க தெலங்கானா அரசு முடிவெடுத்துள்ளது. அந்த பள்ளி திறப்பு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சீதக்கா, ”சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEFCC) விதிமுறைகள், வனப்பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு, வனவிலங்கு சரணாலய பகுதிகளில் நிரந்தரக் கட்டிடங்கள் கட்டுவதைத் தடுக்கிறது. இந்த சவாலுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்த பகுதிகளில் கல்வி வசதிகளை வழங்குவதற்கு கன்டெய்னர் அடிப்படையிலான பள்ளிகளை அமைக்க அரசாங்கம் தேர்வு செய்துள்ளது” என்று தெரிவித்தார்.