மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
அமித் ஷாவை தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் திடீரென சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு டெல்லியில் நடந்துள்ளது.
பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் திடீரென சந்தித்து பேசியுள்ளார். டெல்லியில் உள்ள அமித் ஷாவின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
Happy to Meet Hon'ble @HMOIndia Shri. @AmitShah ji at #NewDelhi.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) June 27, 2024
மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்களை புதுதில்லியில் சந்தித்ததில் மகிழ்ச்சி.... pic.twitter.com/MjTqYviLaZ
ஆந்திர பிரதேச முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றபோது, தமிழிசையை அமித்ஷா கண்டித்தது போன்ற காட்சிகள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியது. இந்த நிகழ்வுக்கு பின்னர் அமித்ஷாவை முதல்முறையாக சந்தித்திருக்கிறார் தமிழிசை சௌந்தர்ராஜன்.
இந்த சந்திப்பின்போது இருவரும் என்ன பேசினார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து அமித் ஷாவுடன் தமிழிசை பேசியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அண்ணாமலை - தமிழிசை பிரச்னை: மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல் வெடித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் பாமக, அமமுக, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் அணி, ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதி கட்சி என மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டபோதிலும் பாஜக கூட்டணியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
இப்படிப்பட்ட சூழலில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால் திமுகவுக்கு ஓர் இடத்தில்கூட வெற்றி இல்லாமல் போயிருக்கும் என தமிழிசை பேசியிருந்தார். தற்போது, கட்சியில் சமூக விரோதிகளுக்கு பொறுப்புகள் தரப்படுவதாகவும் தான் தலைவராக இருந்த போது அப்படி நடக்கவில்லை என அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்தார்.
ஒரு படி மேலே சென்று, உட்கட்சி ஐடி நிர்வாகிகள் சொந்த தலைவர்களையே விமர்சிக்கிறார்கள் என்றும் முன்னாள் தலைவர் என்ற அடிப்படையில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். தமிழிசை, அண்ணாமலை பிரச்னை பூதாகரமாக வெடித்தது.
இந்த சூழலில்தான், சந்திரபாபு நாயுடு பதவியேற்பின்போது, தமிழிசையை அமித்ஷா கண்டிப்பது போன்ற காட்சிகள் வெளியாகின. அண்ணாமலையை விமர்சித்த காரணத்தால் தமிழிசையை அமித் ஷா எச்சரிப்பதாக செய்திகள் பரவின.