Bengaluru Dog: ஆத்தாடி... எத்தா தண்டி.. ரூ.20 கோடிக்கு வாங்கப்பட்ட சிங்கம் போல் இருக்கும் பிரமாண்ட நாய்
பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ.20 கோடிக்கு பிரமாண்ட நாய் ஒன்றை வாங்கி வளர்த்து வருகிறார்.
செல்லப்பிராணிகளை வளர்ப்பது பெரும்பாலானோருக்கு பிடித்த ஒரு முக்கிய வழக்கமாக உள்ளது. குறிப்பாக பணக்காரர்கள் நாய்களை அதிலும் விலை உயர்ந்த உயர் ரக மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நாய்களை வளர்ப்பதில் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். குடும்பத்தில் ஒரு நபராகவே அந்த செல்லப்பிராணிகளை கருதி, மிகுந்த பாசமுடன் வளர்த்து அதற்கேற்ற சகல வசதிகளையும் வீடுகளிலேயே செய்து தருகின்றனர். அவர்களின் பராமரிப்பு முறை பலரையும் ஆச்சரியப்படுத்தும். அந்த வகையில் தான் பெங்களூருவை சேர்ந்த ஒரு நபரின் செயல் பலரையும் வியப்படைய செய்துள்ளது.
பெங்களூர்வை சேர்ந்த சதிஷ் என்பவர் 'கடபோம்ஸ் கென்னல்ஸ்' என்ற பெயரில் வளர்ப்பு நாய்களை விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார். அதோடு, இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். விதவிதமான, வெவ்வேறு இனங்களை சேர்ந்த, விலையுயர்ந்த நாய்களை வளர்ப்பதில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். ஏற்கனவே 'திபெத்தியன் மஸ்டிப்' இன அரிய வகை நாயை ரூ.10 கோடிக்கும், 'அலஸ்கன் மலமுடே' இன அரிய வகை நாயை ரூ.8 கோடிக்கும், கொரியாவை சேர்ந்த 'தோசா மஸ்டிப்ஸ்' இன நாயை ரூ.1 கோடிக்கும் வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
இந்நிலையில் தான், ஐதராபாத்தை சேர்ந்த தனது நண்பரிடமிருந்து 'காகேசியன் ஷெப்பர்டு' இன நாயை, ரூ.20 கோடிக்கு சதிஷ் விலைக்கு வாங்கியுள்ளார். வெறும் ஒன்றரை வயதிலேயே அந்த நாய் எட்டியுள்ள அபார வளர்ச்சி மற்றும் கம்பீரமான தோற்றம் காண்போரை ஆச்சரியப்படுத்துவதோடு பயமுறுத்தவும் செய்கிறது. அந்த நாய்க்கு 'கடபோம் ஹைடர்' என சதிஷ் பெயர் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள சதீஷ், ஐதராபாத்தை சேர்ந்த ஒருவரிடம் இருந்து ''காகேசியன் ஷெப்பர்டு'' இன நாயை ரூ.20 கோடி கொடுத்து வாங்கினேன். திருவனந்தபுரத்தில் நடந்த நாய் கண்காட்சியில் 'கடபோம் ஹைடர்' கலந்து கொண்டு 32 பதக்கங்களை வென்று அசத்தியது. 'கடபோம் ஹைடர்' அனைவருடனும் பாசத்துடன் பழகி வருகிறது. எனது வீட்டில் கடபோம் ஹைடருக்கு என தனியாக குளிரூட்டப்பட்ட அறை ஒதுக்கி உள்ளேன். கடந்த நவம்பர் மாதம் 'கடபோம் ஹைடரை அனைவருக்கும் அறிமுகப்படுத்த விரும்பினேன்'. ஆனால் தற்போது 'கடபோம் ஹைடருக்கு தலைமுடி கொட்டும் பிரச்சினை உள்ளது'. இதனால் அடுத்த மாதம் 'கடபோம் ஹைடரை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவேன்'. ''காகேசியன் ஷெப்பர்டு'' இனத்தை சேர்ந்த 2 நாய் குட்டிகளை ரூ.5 கோடி கொடுத்து வாங்கி உள்ளேன். அவற்றையும் நானே வளர்க்க உள்ளேன் என சதீஷ் தெரிவித்துள்ளார்..
காகேசியன் ஷெப்பர்டு இன நாய்கள் மிகவும் தைரியம், தன்னம்பிக்கை, பயமின்மை, அறிவுத்திறன் கொண்டவை. இந்த நாய்கள் 10 முதல் 12 வருடங்கள் உயிர்வாழ கூடியவை. சராசரியாக இந்த இன நாய் 23-30 இன்ச் வரை வளர்வதோடு, 45 முதல் 77 கிலோ எடையை கொண்டிருக்கும். காகேசியன் ஷெப்பர்டு வகை நாய் பெரும்பாலும் ஆர்மீனியா, சர்க்காசியா, துருக்கி, அஜர்பைஜான், தாகெஸ்தான் மற்றும் ஜார்ஜியா போன்ற இடங்களில் அதிகம் காணப்படுகிறது. இந்தியாவில் இந்த இன நாய்களை காண்பது மிகவும் அரிதானது என்பது குறிப்பிடத்தக்கது.