News Headlines: சமூக நீதி நாள்... புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு தடை... மேலும் சில முக்கியச் செய்திகள்!
இன்றைய தினத்தின் காலையில் அறிய வேண்டிய முக்கிய செய்திகள் சில...
பெரியாரின் பிறந்த நாளான இன்று (செப்.17) தமிழகத்தில் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்கும் திரு. ஆர்.என். ரவி நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மாநில அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ. வேலு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தமிழ்நாட்டில் சமூகநீதி முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காகத் தமிழக அரசால் ஒரு கண்காணிப்புக் குழுவை அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூக நீதி அளவுகோல் முறையாக, முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை இக்குழு கண்காணிக்கும்; வழிகாட்டும்; செயல்படுத்தும். சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு இக்குழு பரிந்துரை செய்யும். இதற்கான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இதில் அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம்பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.
‘அரசுப்பணிகளில் அனைத்து சமூகத்தினரும் ஏற்றம்பெறும் வகையில் பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும்’ என்ற சமூகநீதி அரசாணை வெளியிடப்பட்ட நூற்றாண்டு நாள் இன்று!#SocialJustice புரட்சியே இலட்சக்கணக்கான இல்லங்களில் விளக்கேற்றியது.
— M.K.Stalin (@mkstalin) September 16, 2021
இன்றைய நாளில், சமூகநீதிக் கண்காணிப்புக்குழு அமைக்கப்படுகிறது! pic.twitter.com/xpqP01wS4Z
ட்ரோன் தயாரிப்பில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 5-ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிராகத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டம் கடந்த பிப்ரவரி 2021ல் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தால் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது.
அதிமுக-வைச்சேர்ந்த தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். ரூ.34 லட்சம் ரொக்கம், ரூ. 1.08 லட்சம் வெளிநாட்டு பணம், ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்கள், 623 சவரன் தங்க நகைகள்...
47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.30 லட்சம் மதிப்புள்ள 275 யூனிட் மணல் ஆகியவை கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
தேசிய மாணவர் படையை விரிவாக ஆய்வு செய்வதற்கான உயர்மட்ட நிபுணர் குழு நாடாளுமன்ற உறுப்பினர் பய்ஜெயந்த் பாண்டா தலைமையில் பாதுகாப்பு அமைச்சகம் அமைத்துள்ளது. இந்த குழுவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசத்தை கட்டமைப்பதிலும் நாட்டின் வளர்ச்சியிலும் இன்னும் சிறப்பான பங்காற்றும் வகையில் தேசிய மாணவர் படை உறுப்பினர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும், முன்னாள் உறுப்பினர்களை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதற்கும், சர்வதேச இளைஞர் அமைப்புகளுக்கு இணையாக தேசிய மாணவர் படையை மேம்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை இக்குழு பரிந்துரைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,693 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,40,361-ஆக அதிகரித்துள்ளது.
கோவிட் 19-க்கான பரவலை கட்டுப்படுத்துவதற்கான நெறிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், வாசிக்க: Madras HC: ’மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிராகத் தடை!' - உயர்நீதிமன்றம் உத்தரவு!