Madras HC: ’மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிராகத் தடை!' - உயர்நீதிமன்றம் உத்தரவு!
இந்திய இறையாண்மைக்கு எதிராக இருக்கும் செய்திகளைத் தணிக்கை செய்யும் வகையில் புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தை கடந்த பிப்ரவரியில் மத்திய அரசு அமலுக்குக் கொண்டுவந்தது.
மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிராகத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டம் கடந்த பிப்ரவரி 2021ல் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தால் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டபோதே இதற்கு வலுத்த எதிர்ப்பு இருந்த நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றமும் இதுதொடர்பான வழக்கு விசாரணை ஒன்றில் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.
இந்திய இறையாண்மைக்கு எதிராக இருக்கும் செய்திகளைத் தணிக்கை செய்யும் வகையில் புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தை கடந்த பிப்ரவரியில் மத்திய அரசு அமலுக்குக் கொண்டுவந்தது. இதன்மூலம் டிஜிட்டல் ஊடகங்களில் இந்திய ஒற்றுமைக்கு எதிராக இருக்கும் செய்திகள் அரசால் தணிக்கை செய்யப்படும்.
BREAKING: Madras High Court stays Rule 9 classes 1 and 3 of the #ITRules2021.
— Live Law (@LiveLawIndia) September 16, 2021
"Prima facie there is substance that the oversight mechanism to control the media by the government may rob the media of its independence and the fourth pillar of the democracy may not be there at all" pic.twitter.com/0jXuFhVlwj
ஆனால் இந்தச் சட்டத்திருத்தம் எழுத்தாளர்களின் சுதந்திரத்துக்கு எதிராக இருப்பதாக பத்திரிகையாளர்கள் முகுந்த் பத்மநாபன் இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதற்கு பதிலளித்திருந்த மத்திய அரசு புதிய விதிகள் பதிப்பாளர்களைக் காக்கும் வகையில்தான் இருக்கிறது என்றும் கருத்துகள் இறையாண்மைக்கு எதிராக இருந்தால் அதனை நிறுவனங்களே நீக்கிவிடும் அளவுக்கான சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது என பதில் மனு தாக்கல் செய்திருந்தது.
இதற்கிடையே இன்று நீதிபதி சஞ்சீப் பனர்ஜி தலைமையிலான அமர்வு இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. விசாரணையில் விளக்கமளித்த மத்திய அரசு தரப்பு, ‘இதுதொடர்பான வழக்கு ஏற்கெனவே மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு இந்த விதி தொடர்பாகத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. அது நாடு முழுமைக்கும் பொருந்தும், மேலும் இதனை உச்சநீதிமன்றமும் விசாரிக்க உள்ளது என்பதால் இந்த வழக்கை தற்போது விசாரிக்கத் தேவையில்லை எனக் கூறப்பட்டது இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு, மும்பை உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்த 15 நாட்களுக்குப் பிறகுதான் தங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகவும் அதனால் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.’
இதையடுத்து கருத்துப்பதிவு செய்த உயர்நீதிமன்ற அமர்வு, 'உச்சநீதிமன்றம் இந்த வழக்கை வருகின்ற அக்டோபரில் விசாரிக்காத நிலையில் சென்னை உயர்நீதிமன்றமே இதனைக் கையிலெடுத்து விசாரிக்கும்' எனத் தெரிவித்துள்ளது.