Governor RN Ravi: ஒரு வாரம் டெல்லியில் முகாம்! இன்று மாலை பறக்கிறார் ஆளுநர்! அடுத்தது என்ன?
செந்தில் பாலாஜி நீக்கப்பட்டதாக தனது கடிதத்தை நிறுத்தி வைப்பதாக தமிழ்நாடு அரசிடம் கடிதம் மூலம் தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், இதை ஒருபோதும் எங்களால் ஏற்று கொள்ள முடியாது. இந்த விவகாரத்தை சட்டரீதியாக சந்திப்போம் என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
இதையடுத்து, மத்திய உள்துரை அமைச்சர் அமித்ஷா இந்த விவகாரம் தொடர்பாக தலையிட்டு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்துமாறு ஆளுநரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, செந்தில் பாலாஜி நீக்கப்பட்டதாக தனது கடிதத்தை நிறுத்தி வைப்பதாக தமிழ்நாடு அரசிடம் கடிதம் மூலம் தெரிவித்தார்.
இந்த விவகாரம் ஒரு புறம் இருக்க, ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்க அனுமதி வேண்டுமென்றும், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதம் தமிழ்நாடு மட்டுமில்லாமது இந்தியளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசின் இந்த கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை விளக்கமளித்தது. அதில், பி.வி. ரமணா, சி. விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்குகளை சிபிஐ விசாரித்து வருவதாகவும் இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்திருந்தது.
அதேபோல, கே.சி. வீரமணிக்கு எதிராக ஊழல் தடுப்பு பிரிவு தொடர்ந்த வழக்கின் விசாரணை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையை மாநில அரசு சமர்பிக்க வேண்டும். ஆனால், இன்னும் அதை சமர்பிக்காத காரணத்தால் அதில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஆளுநர் விளக்கம் அளித்திருந்தார். எம்.ஆர். விஜயபாஸ்கர் வழக்கில் மாநில அரசிடமிருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை என தெரிவித்தது.
இந்த விளக்கத்திற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர், “முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவலை ஆளுநர் மாளிகை எப்படி தருகிறார்கள் என்பது ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது.” என தெரிவித்திருந்தார்.
இப்படியான அடுத்தடுத்தான பரபரப்பு சூழலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி (இன்று) ஜூலை 7 ம் தேதி மாலை 5 மணிக்கு டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் அவர் ஒரு வாரம் தங்கி செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி நீக்கம் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்களின் ஊழல் வழக்கு என அனைத்து குறித்தும் ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.