"குண்டும் குழியாக சாலை அமைத்தால் சிறை" கொதித்த நிதின் கட்காரி!
சாலைகளில் எதாவது விபத்து ஏற்பட்டால், அந்தச் சாலையை அமைத்த ஒப்பந்ததாரர், பொறியாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்தை ஏற்று அரசு பணிகளை சரிவர நிறைவேற்றாத ஒப்பந்ததாரர், பொறியாளர்களை பிணையில் வெளிவராதபடி கைது செய்ய தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, "சாலைகளை தவறாக குண்டும் குழியுமாக அமைப்பது 'பிணையில்லாத குற்றமாக' மாற்றப்பட வேண்டும்.
அதிரடியில் இறங்கிய மத்திய அமைச்சர்:
சாலைகளில் எதாவது விபத்து ஏற்பட்டால், அந்தச் சாலையை அமைத்த ஒப்பந்ததாரர், பொறியாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்" என கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத், "
இது மிகவும் வரவேற்கத்தக்கது. குறிப்பாக தமிழகத்தில் கண்டிப்பாக செயல்படுத்தபட வேண்டும். நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், அரசின் பல்வேறு கட்டடங்கள் பல நூறு கோடிகள், பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகின்றன.
ஆனால், முறையாக அமைக்கப்படாததால், விரைவிலேயே அவை சேதமடைவதும், உடைவது, மழைநீரில் அடித்துச் செல்வதும் நிகழ்கின்றன. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. இந்நிலையில்தான் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஒப்பந்ததாரர், பொறியாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களை பிணையில் வர முடியாத அளவுக்கு கைது செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார்.
நடந்த முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இந்த கோரிக்கையை அதிமுக உறுப்பினர் எழுப்பியபோது, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேலி செய்து கடந்திருக்கிறார். மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்படும் எந்தவொரு கட்டமைப்பும், அவை எதற்காக உருவாக்கப்பட்டதோ, எவ்வளவு காலத்திற்கு தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டதோ அவ்வளவு காலமும் நீடித்து பலன் தரும் வகையில் இருக்க வேண்டும். அதை உறுதிப்படுத்த வேண்டிய அரசின் கடமை. அந்த கடமையை உணர்ந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருக்கிறார்.
தமிழக பாஜக விடுத்த கோரிக்கை:
*தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழையில் அணையே அடித்துச் செல்லப்பட்ட அவலம் நடந்தேறியது.
தமிழகத்தில் உள்ளாட்சித் துறை சார்பாக தமிழகமெங்கும் மாநகராட்சிகளில், உள்ளாட்சிகளில் அமைக்கப்படும் சாலைகள் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளில் போடப்பட்ட சாலைகளை ஆய்வு செய்தாலே இந்த உண்மை விளங்கும். தற்பொழுது தரமற்ற சாலைகளை தாண்டி சாலைகளின் ஓரம் மக்கள் நடக்கும் நடைபாதைகள் அதேபோன்று தரமற்று மோசமான முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன.*
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மிக முக்கிய சாலையான பல்லவன் சாலை, மற்றும் பேப்பர் மில் சாலை நடைபாதைகள் மிக மோசமான தற்போது அமைக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் தொகுதியிலேயே சென்னை மாநகராட்சி ஆணையாளர், மண்டல ஆணையாளர் போன்றவர்கள் நேரடியாக சாலைப் பணிகள் தரம் குறித்தும், சாலையோர ஆக்கிரமிப்புகள் குறித்தும் மேற்பார்வை இடுவதில்லை. தவறுகள் நடப்பதை கண்டித்து உரிய நடவடிக்கை எடுப்பதும் இல்லை
மிக முக்கியமாக தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் நேரு, மாவட்ட அரசியலை தாண்டி மாநில முழுக்க நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்கள், சாலைகள் கிராமப்புற மேம்பாட்டு திட்டங்கள் குறித்து எந்த விதமான சோதனைகளையும் நடத்துவதும் இல்லை. விழா நாயகனாக அனைத்து மாநகராட்சிகளிலும் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களிடம் பெருமை பேசி, பொதுப்பணித்துறை திமுக ஆதரவு காண்ட்ராக்டர்களின் வளர்ச்சியில் மட்டுமே அக்கறை கொள்கிறார். எனவே தமிழகம் முழுக்க உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தரமற்ற சாலைகள், நடைபாதைகள், தொகுதி மேம்பாட்டு திட்டங்கள் அனைத்துமே ஊழல் மயமாகி உள்ளது.
எனவே, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியபடி, சாலைகள், மேம்பாலங்கள், அரசு கட்டடங்கள் சரியாக அமைக்கப்படாவிட்டால், ஒப்பந்ததாரர், பொறியாளர், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் பிணையில் வெளியே வர முடியாதபடி கைது செய்யும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
தமிழகத்தில் இப்படி ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டால் தான் ஊழல் வெகுவாக குறையும். தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டால், வளர்ச்சி திட்டங்கள் ஊழல் மயமாகி, பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தையும், சிக்கித் தவிக்கும் மக்களையும் காப்பாற்றும் விதத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக விழித்துக் விழித்துக் கொண்டு, அரசு பணிகளை சரிவர நிறைவேற்றாத ஒப்பந்ததாரர், பொறியாளர்களை பிணையில் வெளிவராதபடி கைது செய்ய சட்டம் இயற்ற வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

