Taliban Foreign Minister:ஆப்கானிஸ்தான் அமைச்சர் முன் இந்திய பெண் பத்திரிகையாளர்கள்! மாஸ் சம்பவம்!
Taliban Foreign Ministe: டெல்லியில் இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் இடம் பெற்றனர்.

Taliban Foreign Ministe: டெல்லியில் இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் இடம் பெற்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி இந்தியாவிற்கு வந்தார். அப்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் ஷங்கரை அவர் சந்தித்து பேசினார்.
பெண் பத்திரிகையாளர்கள் இடம்பெறவில்லை:
இச்சூழலில் டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் இரு நாட்டு அமைச்சர்களும் இணைந்து செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்கள். இந்த நிலையில் இந்த செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மறுபுறம் பல்வேறு அரசியல் கட்சி ஆளுமைகளும் இந்த செயலுக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். அந்த வகையில் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரயங்கா காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,”நரேந்திர மோடி அவர்களே செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர் இடம்பெறாதது குறித்த உங்கள் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்துங்கள்" என்று கூறியிருந்தார்.
அதேபோல், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தா மஹுவா மொய்த்ரா வெளியிட்ட எக்ஸ் பதிவில்,”ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இந்தியாவில் பெண் பத்திரிகையாளர்களை ஒதுக்கிவிட்டு செய்தியாளர்கள் சந்திப்பை நடத்த இந்திய அரசு எப்படி அனுமதிக்கிறது. ஏன் ஆண் பத்திரிகையாளர்கள் அந்த அறையில் இருந்தனர்”என்று கேள்வி எழுப்பினார்.இந்திய பத்திரிகையாளர்கள் சங்கமும் இந்திய மகளிர் பத்திரிகையாளர் சங்கமும் (IWPC) பெண் பத்திரிகையாளர்களை அழைக்காதது மிகவும் பாரபட்சமானது என்று தங்களது கண்டனத்தை பதிவு செய்திருந்தது.
இன்று கலந்து கொண்டனர்:
இந்த நிலையில் தான் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இன்று (அக்டோபர் 12) ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் குழு பத்திரிகையாளர் சந்திப்புக்கு புதிய அழைப்பிதழ்களை வெளியிட்டது. இதில் அனைவருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டது. இதில் பெண் பத்திரிகையளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் சேர்க்கப்படாதது தொடர்பான சர்ச்சைக்கு பதிலளித்த முத்தாகி, இந்த சம்பவம் வேண்டுமென்றே செய்யப்பட்டதல்ல என்று கூறியிருந்தார்.
பெண்கள் உரிமைகள் குறித்த தாலிபானின் நிலைப்பாடு:
2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய தாலிபான்கள், பெண்கள் உரிமைகள் மீதான கடுமையான கட்டுப்பாடுகளுக்காக பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சிக்கப்பட்டனர். மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஆறாம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்பதைத் தடைசெய்தது, பெரும்பாலான வேலைகளில் இருந்து அவர்களைத் தடைசெய்தது, பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் அழகு நிலையங்கள் போன்ற பொது இடங்களுக்குச் செல்வதைத் தடைசெய்தது குறிப்பிடத்தக்கது.





















