Taj Mahal: 15 நாட்கள் கெடு: இல்லையேல் சீல்... தாஜ்மஹால் நிர்வாகத்துக்கு நோட்டீஸ்..!
குடிநீர் வரி மற்றும் சொத்து வரி செலுத்தக் கோரி தாஜ்மஹால் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
குடிநீர் வரி மற்றும் சொத்து வரி செலுத்தக் கோரி தாஜ்மஹால் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ரூ. 1.4 லட்சம் சொத்துவரி மற்றும் ரூ.1 கோடி குடிநீர் வரி செலுத்தக்கோரி அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 15 நாட்களில் வரிகளை செலுத்தாவிட்டால் தாஜ்மஹாலுக்கு சீல் வைக்கப்படும் என ஆக்ரா மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாஜ்மஹாலுக்கு தண்ணீர் வரியாக ரூ.19 கோடியும், சொத்து வரியாக ரூ1.5 லட்சமும் செலுத்துமாறு இந்திய தொல்லியல் துறைக்கு ஆக்ரா முனிசிபல் கார்ப்பரேஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் 2021- 22 மற்றும் 2022-23 நிதியாண்டிக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இந்திய தொல்லியல் கண்காணிப்பு ஆய்வாளர் ராஜ்குமார் படேல் தெரிவிக்கையில், நினைவு சின்னங்களுக்கு சொத்து வரி விதிக்கப்படாது. வணிகரீதியாக பயன்படுத்தாத தண்ணீருக்கு வரி செலுத்த வேண்டியதில்லை. தாஜ்மஹால் வளாகத்திற்குள் பசுமையை பராமரிக்க தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் தொடர்பான அறிவிப்புகள் மற்றும் தாஜ்மஹாலுக்கான சொத்து வரி முதல்முறையாக விதிக்கப்பட்டுள்ளது. இது தவறுதலாக அனுப்பப்பட்டிருக்கலாம்” என தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து நகராட்சி ஆணையர் நிகில் டிஃபண்டே கூறுகையில், “ தாஜ்மஹால் வரி தொடர்பான நடவடிக்கைகள் பற்றி எனக்கு தெரியாது. வரிகளை கணக்கிடுவதற்க்காக ஆக்ரா முழுவதும் புவியியல் தகவல் அமைப்பு கணக்கெடுப்பின் அடிப்படையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில், அரசு கட்டிடங்கள், மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட அனைத்து வளாகங்களுக்கும் நிலுவையில் உள்ள வரி தொகையை கணக்கெடுக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சட்டத்தின் சரியான செயல்முறையை பின்பற்றுபவர்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்திய தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதால், அவர்களிடமிருந்து பெறப்பட்ட பதிலின் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
இதனிடையே இந்த நோட்டீஸ் அதிர்ச்சி அளித்துள்ளதாக ஆக்ரா சுற்றுலா நல வாரிய செயலாளர் விஷால் சர்மா தெரிவித்துள்ளார். அதில், “ தாஜ்மஹால் மத்திய அரசின் சொத்து என்றும், உலக பாரம்பரிய சின்னம். ஆக்ரா முனிசிபல் கார்ப்பரேஷன் ஏன் நினைவுச்சின்னத்திற்கு வரி வசூலிப்பு அறிவிப்பை வழங்கியது என்பது புரிந்துகொள்ள முடியவில்லை.
தாஜ்மஹால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக 1920-ல் 102 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், நினைவுச்சின்னத்திற்கு வீட்டுவரி நோட்டீஸ் அனுப்பப்படுவது இதுவே முதல்முறை என்று அவர் கூறினார்.
பிரிட்டிஷ் அரசாங்கம் கூட தாஜ்மஹாலை வீட்டு வரியின் கீழ் கொண்டு வந்ததில்லை என்றும், இந்த அறிவிப்பு ஏன் வெளியிடப்பட்டது என்பதை ஆக்ரா மேயர் விளக்க வேண்டும்” என தெரிவித்தார்.