Swiggy: ஒரு நொடிக்கு 2.5 பிரியாணி ஸ்விகியில் ஆர்டர்! ரூ.42 லட்சத்துக்கு ஆர்டர் செய்த மும்பைவாசி! சுவாரஸ்யம்!
ஸ்விகியில் இந்தாண்டு ஒரு நொடிக்கு 2.5 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த நபர் 42 லட்சத்திற்கு ஸ்விகியில் உணவுகளை ஆர்டர் செய்துள்ளார்.
இந்தியாவிலே பெரும்பாலான மக்கள் விரும்பும் உணவாக பிரியாணி உள்ளது. விடுமுறை நாட்கள், விசேஷங்கள், பண்டிகை என எந்த ஒரு கொண்டாட்டத்திலும் பிரியாணி தவிர்க்க முடியாத உணவாக உள்ளது. ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி, சோமோட்டாவிலும் அதிகளவு ஆர்டர் செய்யப்படும் உணவாக பிரியாணியே இருந்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி இந்தாண்டு அதிகளவில் ஆர்டர்கள் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், அதிகளவில் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பிரியாணி முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து 8வது ஆண்டாக பிரியாணி இந்த சாதனையை படைத்துள்ளது. கேக்ஸ், குலாப்ஜாமுன், பிசாஸ் அதிகளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த ஸ்விகி பயனாளர் ஒருவர் 42.3 லட்சத்திற்கு உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். பிரியாணிக்கு புகழ்பெற்ற ஹைதரபாத்தில் 1633 பிரியாணி இந்தாண்டு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு நாளில் 4 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அதில் சிக்கன் பிரியாணி மிகவும் பிரபலமாக இருந்துள்ளது.
சராசரியாக 5.5 சிக்கின் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டால் அதில் ஒன்று வெஜ் பிரியாணியாக உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டியின்போது சண்டிகரில் ஒரு குடும்பத்தினர் ஒரேடியாக 70 பிரியாணியை ஆர்டர் செய்துள்ளனர். இந்த 2023ம் ஆண்டில் இந்தியாவில் ஒரு நொடிக்கு 2.5 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 1ம் தேதி மட்டும் 4 லட்சத்து 30 ஆயிரம் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டிருந்தது. இந்தாண்டு மட்டும் ஸ்விகியில் 2.49 மில்லியன் புதிய பயனாளர்கள் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர். உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்ற அன்று மட்டும் 188 பிசாஸ் ஒரு நிமிடத்திற்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலே அதிகளவில் ஸ்விகி ஆர்டர் செய்பவர்கள் சென்னை, டெல்லி மற்றும் ஹைதரபாத் நகரைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளர்கள் இந்த நகரங்களில் இருக்கின்றனர். துர்கா பூஜை தினத்தில் குலாப் ஜாமுன் அதிகளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அப்போது 7.7 மில்லியன் குலாப்ஜாமமுன்ஸ் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
நவராத்திரி கொண்டாட்டத்தின்போது அந்த 7 நாட்களில் மிகவும் விரும்பப்பட்ட சைவ உணவாக மசாலா தோசை இருந்துள்ளது. பெங்களூர் நகரம் கேக் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. பெங்களூரில் மட்டும் 8.5 மில்லியன் சாகலேட் கேக் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, அன்னையர் தினத்தன்று அதிகளவு கேக் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. தனிநபர் அதிகபட்சமாக சென்னையைச் சேர்ந்த ஒரு ஸ்விகி பயனாளர் 31 ஆயிரத்து 748 ரூபாய்க்கு ஒரே ஆர்டரில் உணவுகளை ஆர்டர் செய்துள்ளார். காஃபி, பழச்சாறுகள், குக்கீஸ், சிப்ஸ் என பல பொருட்களை இன்ஸ்டா மார்ட்டில் ஆர்டர் செய்துள்ளார். ஜனவரி 1 முதல் நவம்பர் 23 வரை எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.