மும்பை இன்ஸ்டாகிராம் நண்பன்: பெற்றோருக்கு தெரியாமல் இந்தியா வந்த 16 வயது ஸ்வீடன் சிறுமி!
மும்பையில் உள்ள தனது இன்ஸ்டாகிராம் நண்பனை பார்ப்பதற்காக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி பெற்றோருக்கு தெரியாமல் இந்தியா வந்துள்ளார்.
தகவல் தொழில்நுட்ப வசதியால் உருவாக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்டவைகளின் வசதியால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியும். இன்று இணைய உலகில் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளமாக இன்ஸ்டாகிராம் பயன்படுத்தப்படுகிறது.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை அதிகளவில் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், திடீரென அந்த சிறுமி மாயமாகியுள்ளார். இதனால், அந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, அந்த நாட்டு காவல்துறையினருக்கு அவர்களது பெற்றோர்கள் புகார் அளித்தனர். மேலும், அனைத்து சமூக வலைதளங்களிலும் தங்களது மகளை காணவில்லை என்றும் தகவல் தெரிவித்தனர்.
அந்த நாட்டு போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியது. காணாமல் போன 16 வயது சிறுமியின் இன்ஸ்டாகிராம் கணக்கை ஆய்வு செய்தபோது, அந்த பெண் இந்தியாவில் உள்ள மும்பையில் உள்ள ஒரு 19 வயதுடைய பொறியில் படிக்கும் மாணவருடன் நட்பாக அடிக்கடி சாட் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், காணாமல் போன அந்த சிறுமி மும்பையில் உள்ள தனது நண்பனை பார்ப்பதற்காக ஸ்வீடனில் இருந்து ஒரு மாதத்திற்கு சுற்றுலா பயணிகள் விசா எடுத்துக்கொண்டு இந்தியா சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, ஸ்வீடன் நாட்டு போலீசார் மும்பை நகர போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். மும்பை போலீசார் ஸ்வீடன் சிறுமியின் நண்பன் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினார். ஸ்வீடன் நாட்டில் இருந்து அந்த 16 வயது சிறுமி கடந்த நவம்பர் மாதம் 27-ந் தேதி மும்பையில் உள்ள அந்த சிறுவனின் வீட்டிற்கு வந்துள்ளார். ஸ்வீடனில் இருந்து தன்னைப் பார்ப்பதற்காக இந்தியா வந்த அந்த சிறுமியை கண்ட அந்த 19 வயது மாணவனும், அவனது பெற்றோர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். உடனடியாக, அந்த பெண்ணை மாணவனின் பெற்றோர்கள் மும்பை டிராம்பேயில் உள்ள தனது உறவுக்கார பெண்ணின் இல்லத்தில் தங்கவைத்துள்ளனர்.
பின்னர், அந்த சிறுமியை மீட்ட மும்பை போலீசார் டோங்ரியில் உள்ள சிறுவர் நல இல்லத்தில் ஒப்படைத்தனர். மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் ஸ்வீடன் சிறுமி தனது இன்ஸ்டாகிராம் நண்பனுடன் வசிப்பதற்காக இந்தியா வந்ததும், அதற்கான விசாவை தங்களது பெற்றோர்களுக்கு தெரியாமல் எடுத்ததும் தெரியவந்தது. பின்னர், இதுதொடர்பாக டெல்லியில் உள்ள ஸ்வீடன் நாட்டு தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஸ்வீடனில் உள்ள அந்த சிறுமியின் தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், அவர் உடனடியாக இந்தியா வந்து தனது மகளை மீட்டுக்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் ஸ்வீடன் புறப்பட்டுச் சென்றார்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்