`சூழலைக் கெடுக்காமல் ஒற்றுமையாக வாழுங்கள்!’ - வெறுப்புப் பேச்சு வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து!
ஹரித்வார் தரம் சன்சத் வெறுப்புப் பேச்சுகளின் மீதான விசாரணையில் வசீம் ரிஸ்வி என்கிற ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி என்பவருக்குப் பிணை வழங்க உத்தராகண்ட் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஹரித்வார் தரம் சன்சத்தில் நிகழ்ந்த வெறுப்புப் பேச்சுகளின் மீதான விசாரணையில் வசீம் ரிஸ்வி என்கிற ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி என்பவருக்குப் பிணை வழங்க உத்தராகண்ட் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு ஒன்று, ஜிதேந்திர தியாகி போன்றோர், `மொத்த சூழலையும் கெடுக்கிறார்கள்’ என்று கூறியுள்ளதோடு, அவரது பிணை மனுவின் மீதான உத்தராகண்ட் மாநில அரசின் கருத்தைக் கேட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய ஹரித்வார் தரம் சன்சத் நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், `பிறர் உணர்வதற்கு முன், அவர்களை உணரச் சொல்லுங்கள். இவர்கள் உணரவே இல்லை. மொத்த சூழலையும் கெடுப்பது போல நடந்துகொள்கிறார்கள்’ எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்து மதத்தைத் தழுவதற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் ஷியா வக்ப் வாரியத்தின் முன்னாள் தலைவரான ஜிதேந்திர தியாகி கடந்த மார்ச் 8 அன்று உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் தனக்குப் பிணை வழங்க மறுத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகினார். `பதில் மனுவைத் தாக்கல் செய்யுங்கள். என்ன நடந்தது என்பது குறித்து எங்களுக்குக் கவலை இல்லை. நாங்கள் மொத்த விவகாரத்தையும் அணுக வேண்டும்.. தண்டனை, எத்தனை நாள்கள் காவல் வைப்பது முதலானவற்றை முடிவு செய்ய வேண்டும்’ எனக் கூறியுள்ளது உச்ச நீதிமன்றம்.
இந்நிலையில், இன்று (மே 12) வழக்கு விசாரணையின் போது, ஜிதேந்திர தியாகியின் வழக்கறிஞர் சித்தார்த் லுத்ராவிடம், `தரம் சன்சத் என்றால் என்ன?’ என உச்ச நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்ப, அவர், `நான் ஆர்ய சமாஜத்தைச் சேர்ந்தவன். எனக்கு தெரியாது.. நான் வீடியோக்களில் பார்த்துள்ளேன்.. அதில் காவி உடை அணிந்த நபர்கள் ஒன்றுகூடி, மேடைகளில் பேசுவார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்ட நீதிபதி அஜய் ரஸ்தோகி, `சூழலைக் கெடுக்கிறார்கள்.. ஒன்றாக அமைதியாக வாழுங்கள்.. வாழ்க்கையை மகிழ்ந்து கொண்டாடுங்கள்’ எனக் கூறியுள்ளார். மேலும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருப்பதாகவும், அவர் ஏற்கனவே ஜனவரி மாதம் முதல் சிறைத் தண்டனை அனுபவித்து வருவதையும் சுட்டிக் காட்டியுள்ளது.
கடந்த ஜனவரி 13 அன்று, இரு தரப்பினரிடையே மோதலைத் தூண்டுவது, பிற சமயத்தினரின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாகப் பேசுவது முதலான வழக்குகளின் கீழ் ஜிதேந்திர தியாகி கைது செய்யப்பட்டார். வெறுப்பைத் தூண்டும் விதமாக அவரது ஆபாச பேச்சுகள் இருந்ததாகக் கூறி, உத்தராகண்ட் மாநில உயர் நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.