Supreme Court: "அங்கு நடக்குது இங்கு நடக்குதுன்னு நியாயபடுத்தாதீங்க" மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
"அங்கு நடக்கிறது, இங்கு நடக்கிறது என சொல்லி மணிப்பூரில் நடைபெற்றதை நியாயபடுத்த முடியாது. இதுவரை நடைபெற்றிராத ஒன்று நடந்துள்ளது" என இந்திய தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில், உச்ச நீதிமன்றம் இதுகுறித்து தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது. கடந்த ஜூலை 20ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, "இதில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்" என இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் எச்சரித்திருந்தார்.
இதை தொடர்ந்து, மணிப்பூர் இனக்கலவரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட உச்ச நீதிமன்றம் பல அதிரடி கருத்துகளை தெரிவித்துள்ளது.
"மணிப்பூரில் நடைபெற்றதை நியாயபடுத்த முடியாது"
குறிப்பாக, நிர்வாணமாக்கப்பட்டு, ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட பழங்குடி பெண்களே உச்ச நீதிமன்றத்தில், தங்களின் அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கூறி, மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர், "மேற்குவங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடைபெறுகிறது" என வாதிட்டார்.
இதற்கு பதிலளித்து பேசிய இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட், "இம்மாதிரியான குற்றங்கள் அங்கு நடக்கிறது, இங்கு நடக்கிறது என சொல்லி மணிப்பூரில் நடைபெற்றதை நியாயபடுத்த முடியாது. இதுவரை நடைபெற்றிராத ஒன்று நடந்துள்ளது. வகுப்புவாத, மதக்கலவரத்திற்கு மத்தியில் வன்முறை நடந்துள்ளது. எல்லாப் பகுதிகளிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகின்றன என்பதைச் சொல்லி எந்தப் பலனும் இல்லை. அதற்கு ஒரே பதில்தான் உள்ளது" என்றார்.
"மணிப்பூரில் நடைபெற்றதை மன்னிக்க முடியாது"
தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, "இதேபோன்ற குற்றங்கள் மற்ற பகுதிகளிலும் நடக்கின்றன என்பதற்காக மணிப்பூர் போன்ற நாட்டின் ஒரு பகுதியில் நடப்பதை நீங்கள் மன்னிக்க முடியாது. மணிப்பூரை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் கேள்வி. அதற்கு பதில் சொல்லுங்கள். இந்தியாவின் அனைத்து மகள்களையும் பாதுகாக்க சொல்கிறீர்களா அல்லது யாரையும் பாதுகாக்க வேண்டாம் என சொல்கிறீர்களா?" என கேள்வி எழுப்பினார்.
இதை தொடர்ந்து வாதிட்ட பெண் வழக்கறிஞர்கள், "விசாரணையின் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்" என்றார். இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், "இந்த வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணித்தால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை" என்றார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கிறிஞர் கபில் சிபல், "இதுபோன்ற எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைச் சொல்ல இப்போது அரசிடம் தரவு இல்லை. இப்போது அங்கு எந்த மாதிரியான நிலைமை நிலவுகிறது என்பதையே இது காட்டுகிறது. உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை கண்காணிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து வாதிட்ட அவர், "வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு காவல்துறை ஒத்துழைத்தது. முதலில், பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையிடம்தான் பாதுகாப்பு கோரி இருக்கின்றனர். ஆனால், பாதுகாப்பு அளிப்பதற்கு பதில் அந்த கும்பலிடம் அழைத்து சென்றது காவல்துறைதான்" என்றார்.