MBBS பட்டம்பெற்ற மருத்துவர்களுக்கு இணையாக ஆயுர்வேத மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கலாமா? உச்சநீதிமன்றம் அதிரடி பதில்..!
"ஒரு மருத்துவ முறை மற்றொன்றை விட உயர்ந்தது என்று நாங்கள் சொல்லவில்லை"
MBBS பட்டம் பெற்ற மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தை ஆயுர்வேத மருத்துவர்களுக்கு அளிக்க முடியாது. ஏன் என்றால், அவர்கள் இருவரும் சமமான வேலையை செய்வதில்லை என உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்துள்ளது. குஜராத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவர்கள், MBBS பட்டம் பெற்ற மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
குஜராத் உயர் நீதிமன்றம் சொன்னது என்ன?
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், MBBS பட்டம் பெற்ற மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தை ஆயுர்வேத மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக குஜராத் அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வி. ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தல் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அலோபதிக்கும் ஆயுர்வேதத்திற்கும் உள்ள வேறுபாட்டை கருத்தில் கொண்ட நீதிபதிகள், "ஆயுர்வேத மருத்துவர்களின் முக்கியத்துவத்தையும், மாற்று/சுதேசி மருத்துவ முறைகளை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்கிறோம்.
"சமமான வேலையைச் செய்யவில்லை"
ஆனால், இரு வகை மருத்துவர்களும் சம ஊதியம் பெறுவதற்கு சமமான வேலையைச் செய்யவில்லை என்பதை நாம் மறந்துவிட முடியாது. ஒவ்வொரு மாற்று மருத்துவ முறையும் வரலாற்றில் அதன் பெருமைக்குரிய இடத்தைப் பெற்றிருக்கும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.
ஒரு மருத்துவ முறை மற்றொன்றை விட உயர்ந்தது என்று நாங்கள் சொல்லவில்லை. மருத்துவ அறிவியலின் இந்த இரண்டு அமைப்புகளின் ஒப்பீட்டுத் தகுதிகளை மதிப்பிடுவது எங்கள் தகுதிக்கு உட்பட்டது அல்ல. உண்மையில், நாங்கள் உணர்வுள்ளவர்கள்.
ஆனால் இன்று, உள்நாட்டு மருத்துவ முறைகளின் பயிற்சியாளர்கள் சிக்கலான அறுவை சிகிச்சைகளை செய்வதில்லை. ஆயுர்வேத ஆய்வு இந்த அறுவை சிகிச்சைகளை செய்ய அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை.
உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு:
ஆயுர்வேத மருத்துவர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை கூட மேற்கொள்ளப்படுவதில்லை. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 176இன் கீழ் இயற்கைக்கு மாறான மரணங்களுக்கான மாஜிஸ்திரேட் விசாரணைக்கு கூட சிவில் அறுவை சிகிச்சை நிபுணரின் முன்னிலையிலேயே பிரேத பரிசோதனை நடத்தப்படுவது அவசியமாகிறது.
அலோபதி மருத்துவர்கள் அவசரகாலப் பணிகளைச் செய்கிறார்கள். காயங்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். நோயாளிப் பிரிவை நடத்துகிறார்கள். ஆயுர்வேத பயிற்சியாளர்கள், அப்படி செய்வதில்லை.
அவர்கள் கடைப்பிடிக்கும் அறிவியலின் இயல்பாலும், அறிவியல் மற்றும் நவீன மருத்துவத் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தாலும், அலோபதி மருத்துவர்கள் செய்யக்கூடிய அவசரக் கடமையையும், காயங்களுக்கான சிகிச்சையையும் ஆயுர்வேத மருத்துவர்களால் செய்ய முடியாது" என்றார்.