Same Sex Marriage: தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படுமா? உச்ச நீதிமன்ற தீர்ப்பு எப்போது?
கடந்த 10 நாள்களாக, மத்திய அரசும், தன்பாலின தம்பதிகள் சார்பிலும் பரபரப்பான வாதங்கள் மேற்கொள்ளப்பட்டது.
தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க கோரி, நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் நிலுவையில் உள்ளன. ஆனால், தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மறுத்து வருகிறது.
தன்பாலின திருமணத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு:
தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க மறுப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தொடர்ந்து வாதம் மேற்கொண்டு வந்தது. இந்த வழக்கை இந்திய தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த அமர்வில், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ். ரவீந்திர பட், ஹிமா கோலி, பி.எஸ். நரசிம்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தன்பாலின தம்பதிகள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, ராஜு ராமச்சந்திரன், கே.வி. விஸ்வநாதன், ஆனந்த் குரோவர் சவுரப் கிர்பால் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
தீர்ப்பு எப்போது?
கடந்த 10 நாள்களாக, மத்திய அரசும், தன்பாலின தம்பதிகள் சார்பிலும் பரபரப்பான வாதங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நடைபெற்ற விசாரணையின்போது, சிறப்பு திருமண சட்டத்தின் கீழ், மனைவி மற்றும் கணவனை இணையர் (spouse) என்று குறிப்பிட வேண்டும் என தன்பாலின தம்பதிகள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் நடந்தால், மனைவி என யாரை குறிப்பிடுவது? இணையர் இறந்தால், யாரை widow/widower என அழைப்பது" என கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, திருமணம் செய்வதற்கான உரிமையை மறுப்பது தங்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் செயல் என்றும் பாகுபாடு மற்றும் சமூக விலக்கலுக்கு வழிவகுக்கும் என்றும் தனிபாலின தம்பதிகளுக்கு ஆதரவாக வாதம் முன்வைக்கப்பட்டது.
சிறப்பு மிக்க தீர்ப்பு:
அப்போது, அடிப்படை சமூக உரிமைகளை தன்பாலின தம்பதிகளுக்கு வழங்க அரசு வழியை கண்டுபிடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. தன்பாலின தம்பதிகளுக்கு திருமண அந்தஸ்து வழங்காமல், இந்த பிரச்னைகளில் சிலவற்றை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதை அரசு ஆராய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கேட்டு கொண்டது.
கடந்த 2018ஆம் ஆண்டு, தன்பாலின ஈர்ப்புக்கு விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் திரும்பப்பெற்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்புக்கு பிறகும், மாற்று பாலினத்தவர் மீது பாகுபாடு காட்டப்படுவதாகவும் இந்திய சமூகம் ஏற்று கொள்ள மறுக்கிறது என்றும் LGBT சமூகத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, சிலி, கொலம்பியா, கோஸ்டாரிகா, கியூபா, டென்மார்க், ஈக்வடார், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், மால்டா, மெக்சிகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல் , ஸ்லோவேனியா உள்ளிட்ட நாடுகளில் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன.