சட்ட போராட்டத்தில் வெற்றி பெறுவாரா சந்திரபாபு நாயுடு? நாளை அவசர வழக்காக எடுக்கும் உச்ச நீதிமன்றம்
கடந்த 8ஆம் தேதி கைதான சந்திரபாபு நாயுடுவின் காவலை, வரும் அக்டோபர் 5ஆம் தேதி வரை நீட்டித்து விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழல் வழக்கில் சிக்கி தற்போது சிறையில் உள்ள ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சட்டப் போராட்டத்தில் தொடர் பின்னடைவுகளை சந்தித்து வருகிறார். கடந்த 8ஆம் தேதி கைதான சந்திரபாபு நாயுடுவின் காவலை, வரும் அக்டோபர் 5ஆம் தேதி வரை நீட்டித்து விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட போராட்டத்தில் தொடர் பின்னடைவு:
ஆந்திர பிரதேச குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் (சிஐடி) தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி அம்மாநில உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அதனை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள அவருக்கு மீண்டும் ஏமாற்றமே கிடைத்துள்ளது. ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று பட்டியலிடப்படாத சூழலிலும், அவசர வழக்காக விசாரிக்க இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு, சந்திரபாபு நாயுடு தரப்பு மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா கோரிக்கை வைத்தார்.
நாளை அவசர வழக்காக எடுக்கும் உச்ச நீதிமன்றம்:
"சந்திரபாபு நாயுடுவின் காவலால் மாநிலத்தில் எதிர்க்கட்சி முடக்கப்பட்டுள்ளது" என மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா வாதிட்டார். இதைத்தொடர்ந்து, "சந்திரபாபு நாயுடு, எப்போது கைது செய்யப்பட்டார்?" என இந்திய தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, செப்டம்பர் 8 என சித்தார்த் லூத்ரா பதில் அளித்தார்.
இன்றே, அதை அவசர வழக்காக எடுக்க எந்த அவசியமும் இல்லை எனக் கூறி, செப்டம்பர் 26 அன்று குறிப்பிடுமாறு சித்தார்த் லூத்ராவை தலைமை நீதிபதி கேட்டு கொண்டார். இதனை தொடர்ந்து, வழக்கு நாளைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
ஆந்திர உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவில், "மாநிலத்தில் மிகப் பெரிய எதிர்க்கட்சியை நிலைகுலையச் செய்ய பழிவாங்குவதற்காக ஆளுங்கட்சி திட்டமிடப்பட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. 21 மாதங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரில் திடீரென மனுதாரரான சந்திரபாபு நாயுடுவின் பெயர் சேர்க்கபட்டுள்ளது.
என்ன நடக்கபோகிறது?
சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டு, அரசியல் காரணங்களால் மட்டுமே அவரது சுதந்திரத்தைப் பறித்துள்ளனர். அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும், மனுதாரரின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் வகையில் சட்டவிரோதமான அரசியல் உள்நோக்கம் கொண்ட விசாரணைக்கு ஆளாக்கப்படுகிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில், இந்த ஊழல் வழக்கின் 37ஆவது குற்றவாளியாக சந்திரபாபு நாயுடு சேர்க்கப்பட்டார். ஆனால், தற்போது முக்கிய குற்றவாளியாக மாநில குற்றப் புலனாய்வுத் துறை சேர்த்துள்ளது. அவரை சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக குடியரசு தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
1988 ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடு மீது ஏசிபி 120(பி), 166, 167, 418, 420, 465, 468, 201, 109, 34 மற்றும் 37 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.