திடீரென ஏற்படும் மாரடைப்பு மரணங்கள்.. கொரோனா தடுப்பூசி காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்
18 முதல் 45 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே, திடீரென ஏற்படக் கூடிய மரணங்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களை அறிய ஐசிஎம்ஆர் மற்றும் என்சிடிசி ஆராய்ச்சி மேற்கொண்டன.

கொரோனா தடுப்பூசிகள் செலுத்திய பின்பு சில திடீர் மரணங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுவது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்), தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (என்சிடிசி) ஆகியவை ஆய்வு மேற்கொண்டன. இந்த ஆய்வுகளில் திடீர் மரணங்களுக்கும் தடுப்பூசிக்கும் இடையே நேரடி தொடர்பு எதுவும் இல்லை என்பது உறுதியாகக் கண்டறியப்பட்டுள்ளது.
திடீரென ஏற்படும் மாரடைப்புகள்:
இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்றும் திறன் வாய்ந்தவை என ஆய்வுகள் கூறுகின்றன. இந்த தடுப்பூசிகள் மிகவும் அரிதான பக்க விளைவுகள் கொண்டவை என்பதும் தெரியவந்துள்ளது.
திடீர் இதய நோய் இறப்புகள் என்பது மரபியல், வாழ்க்கை முறை, முன்பே இருக்கும் நோய்களால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள், கோவிட் பாதிப்புக்குப் பிந்தைய சில சிக்கல்கள் போன்ற பல்வேறு காரணிகளால் ஏற்படலாம்.
குறிப்பாக 18 முதல் 45 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே, திடீரென ஏற்படக் கூடிய மரணங்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்ள ஐசிஎம்ஆர் மற்றும் என்சிடிசி இணைந்து செயல்பட்டு வந்தன. இதை ஆராய, வெவ்வேறு ஆராய்ச்சி அணுகுமுறைகளைப் பயன்படுத்தி இரண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
கொரோனா தடுப்பூசி காரணமா?
ஒன்று கடந்த கால தரவுகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மற்றொன்று தற்போதைய சூழலை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்டதாகும். ஐசிஎம்ஆர்-இன் தேசிய தொற்று நோயியல் நிறுவனம் நடத்திய முதல் ஆய்வு கடந்த 2023ஆம் ஆண்டு, மே மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 47 மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டது.
இதில், கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மற்றும் 2023ஆம் ஆண்டு, மார்ச் மாதத்திற்கு இடையில் திடீரென இறந்த நபர்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. இதில் தடுப்பூசியால் திடீர் மரண அபாயம் இல்லை என்பது உறுதியாகத் தெரிய வந்துள்ளது.
மரணம் அடையும் இளைஞர்கள்:
"இளைஞர்களில் திடீர் மரணங்களுக்கான காரணங்களைக் கண்டறிதல்" என்ற தலைப்பிலான இரண்டாவது ஆய்வைத் தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்), டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனமான எய்ம்ஸ் உடன் இணைந்து நடத்தி வந்தது.
இது, இளைஞர்களில் திடீர் மரணங்களுக்கான பொதுவான காரணங்களைத் தீர்மானிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஆய்வாகும். ஆய்வின் தரவுகளின் ஆரம்பகால பகுப்பாய்வு, இந்த வயதினரிடையே திடீர் மரணத்திற்கு மாரடைப்பு தொடர்ந்து முக்கிய காரணமாக இருந்தது தெரிய வந்தது. ஆய்வு முடிந்ததும் இறுதி முடிவுகள் பகிரப்படும்.
இந்த இரண்டு ஆய்வுகள், இந்தியாவில் இளைஞர்களிடையே ஏற்படும் திடீர் மரணங்கள் பற்றிய விரிவான புரிதலை வழங்கும். கொரோனா தடுப்பூசிகள், ஆபத்தை ஏற்படுத்துவதாக எந்த ஆய்விலும் தெரியவரவில்லை. அடிப்படை சுகாதாரப் பிரச்சினைகள், மரபணு காரணங்கள், வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவையே திடீர் மரணங்களில் பெரிதும் பங்கு வகிக்கின்றன என்பதும் தெரியவந்துள்ளது.
கோவிட் தடுப்பூசியால் திடீர் மரணங்கள் ஏற்பட்டதாக கூறப்படும் கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அறிவியல் ரீதியாக எந்த ஆதாரமும் இல்லாதவை எனவும் நிபுணர்கள் மீண்டும் உறுதி செய்துள்ளனர். இத்தகைய ஆதாரமற்ற தகவல்கள், நாட்டில் தடுப்பூசி மீதான தயக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் பொது சுகாதார நிலை பாதிக்கும்.
மத்திய அரசு, நாட்டு மக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளது. ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட பொது சுகாதார ஆராய்ச்சிக்கு உறுதிபூண்டு அரசு செயல்பட்டு வருகிறது.





















