தாஜ்மஹாலை சுற்றி 500 மீட்டரில் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தடை: உச்சநீதிமன்றம்
தாஜ்மஹாலை சுற்றி 500 மீட்டர் சுற்றளவுக்கு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாஜ்மஹாலை சுற்றி 500 மீட்டர் சுற்றளவுக்கு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்ரா வளர்ச்சி ஆணையம் இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளது. உடனடியாக 500 மீட்டர் சுற்றளவில் அனைத்து தடைகளையும் நீக்கி தாஜ்மஹாலானது அரசியல் சாசனப் பிரிவு 14ல் குறிப்பிட்டபடி இருக்கும்படி உறுதி செய்யுமாறு தெரிவித்துள்ளது.
காதல் சின்னம் தாஜ்மஹால்
இந்தியாவில் உள்ள உலகப் புகழ் பெற்ற மற்றும் வரலாறுகளில் உள்ள ஒரு முக்கியமான இடமாக இருக்கிறது தாஜ்மஹால். இது இந்தியாவின் ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகவும் இருந்து வருகிறது . காதலின் சின்னமாகக் கருதப்படும் இந்த தாஐ்மஹால் தற்போதைய உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாகவும் உள்ளது.
கடந்த 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற யுனஸ்கோ மாநாட்டில் சிறந்த கட்டிடக்கலை பட்டியலின் அடிப்படையில் உலகப் பாரம்பரிய சின்னமாக அடையாளம் காணப்பட்டது.
முகாலயப் பேரரசர்களில் ஒருவரான ஷாஜகானால் கட்டப்பட்டது தான் தாஜ்மஹால். ஷாஜகானுக்கு 15 வயதிலேயே திருமணம் நிச்சயமானது. ஆனால் அவரது பாலர் பருவத்தை கருத்தில் கொண்டு திருமணத்தை 5 ஆண்டுகள் கழித்து முடிப்பது என்று திட்டமிடப்பட்டது. அவரது 20வது வயதில் அர்ஜுமத் பானு பேகத்துடன் பிரமாண்டமாக திருமணம் நடத்தப்பட்டது. மன்னர் வம்ச வழக்கின்படி திருமணத்திற்குப் பின்னர் அர்ஜுமத்தின் பெயர் மாற்றப்பட்டது. அதன்படி அவருக்கு மும்தாஜ் மஹால் என்று பெயர் சூட்டப்பட்டது. இவர்களுக்கு 14 குழந்தைகள் பிறந்தனர். கடைசிப் பிரசவத்தின்போது மும்தாஜ் உயிர் நீத்தார். மனைவியின் நினைவாக ஷாஜகான் கட்டியது தான் தாஜ்மஹால். 1632 ஆம் ஆண்டு தாஜ் மஹால் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. அங்கே மும்தாஜின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. அந்த மஹாலை முழுமையாகக் கட்டிமுடிப்பதற்குள்ளேயே மகன் அவுரங்கஜீபால் ஷாஜஹான் சிறை வைக்கப்பட்டார். சிறையில் இருந்த ஷாஜஹான் தாஜ்மஹாலை பார்த்தபடியே உயிரைவிட்டார். யமுனை நதிக்கரையில் வெள்ளைப் பளிங்குக் கற்களால் உருவான தாஜ்மஹால் இன்றும் காதல் சின்னமாக நிற்கிறது.
வழக்கும் தீர்ப்பும்
தாஜ்மஹாலை சுற்றி 500 மீட்டருக்கு வர்த்தக நடவடிக்கைகள் இருக்கக் கூடாது என்பது ஏற்கெனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தான். இந்நிலையில் சட்டவிரோதமாக சிலர் அங்கே கடைகளை வைத்து ஆக்கிரமிப்பு செய்ததால் மீண்டும் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு கடைகள் வைத்திருந்தவர்களுக்கு வேறு ஒரு புதிய இடத்தில் கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஏடிஎன் ராவ் என்பவரை நீதிமன்றத்தின் சார்பில் மத்தியஸ்தம் செய்ய உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. முதன்முதலில் இந்த வழக்கை 1984ல் சூழலியல் ஆர்வலர் எம்.சி.மேத்தா தொடர்ந்திருந்தார். அப்போதிருந்தே உச்சநீதிமன்றம் இதுபோன்ற பல மனுக்களை சந்தித்துவிட்டது. இந்நிலையில் 2000ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சுட்டிக்காட்டி தற்போது மீண்டும் ஆக்ரா வளர்ச்சிக் குழுமத்திற்கு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

