Special Session: நாடாளுமன்ற சிறப்புகூட்டத்தொடரில் நடக்கப்போவது என்ன? மத்திய அரசு பரபர விளக்கம்
நாடாளுமன்ற சிறப்புக்கூட்டதொடர் எதற்காக கூட்டப்படுகிறது என்பதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
![Special Session: நாடாளுமன்ற சிறப்புகூட்டத்தொடரில் நடக்கப்போவது என்ன? மத்திய அரசு பரபர விளக்கம் Special session of Parliament to discuss Parliamentary journey of 75 years CEC and ECs Appointment Bill likely to be passed Special Session: நாடாளுமன்ற சிறப்புகூட்டத்தொடரில் நடக்கப்போவது என்ன? மத்திய அரசு பரபர விளக்கம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/13/064195d29bd6e36cf14cb871604d3bb21694620667832729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர்:
வரும் செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பொதுவாக, முக்கியமான காரணங்களுக்காகதான் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படும். ஆனால், தற்போது கூட்டப்பட உள்ள சிறப்பு அமர்வுக்கு காரணம் என்ன என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பொது சிவில் சட்டத்தை இயற்ற வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. அதேபோல,
பெண்கள் இட ஒதுக்கீடு, ஒரே நாடு ஒரே தேர்தல், 'இந்தியா' பெயர் மாற்றம் ஆகியவை தொடர்பாகவும் சட்டம் இயற்றப்படலாம் என பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால், இவை எதுவுமே உறுதி செய்யப்படாமல் இருந்தது.
விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும் மசோதாக்கள் என்னென்ன?
இந்த நிலையில், நாடாளுமன்ற சிறப்புக்கூட்டதொடர் எதற்காக கூட்டப்படுகிறது என்பதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணத்தை விவாதிக்கும் நோக்கில் சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்றத்தின் சாதனைகள், அனுபவங்கள், நினைவுகள், அதிலிருந்து கற்று கொண்டது என்ன? என்பது குறித்து சிறப்பு அமர்வில் விவாதிக்கப்படும்" என தெரிவித்துள்ளது. அதேபோல, தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர் நியமன மசோதா, தபால் நிலைய மசோதா 2023 உள்ளிட்டவை விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்கு முன்பு, வரும் 17ஆம் தேதி, அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது. செப்டம்பர் 18ஆம் தேதி, பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கும் சிறப்புக் கூட்டத் தொடர், செப்டம்பர் 19ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சிறப்புக் கூட்டத்தொடர் குறித்து பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியாக காந்தி சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார். அதில், "மற்ற அரசியல் கட்சிகளுடன் எந்த ஆலோசனையும் இல்லாமல் இந்த சிறப்பு அமர்வு கூட்டப்பட்டுள்ளது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கீழே குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்கள் பற்றி விவாதிக்க நேரம் ஒதுக்கப்படும் என நம்புகிறேன்.
1) லடாக், அருணாச்சல பிரதேசம் போன்ற இந்திய எல்லை பகுதிகளில் சீனா ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவது.
2) சாதிவாரி கணக்கெடுப்பின் அவசர தேவை.
3) மத்திய, மாநில அரசுகள் இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள சேதம்.
4) சில மாநிலங்களில் வறட்சி மற்றும் இயற்கை பேரிடர்களால் ஏற்பட்டுள்ள தாக்கம்.
இவற்றை ஆக்கப்பூர்வமான முறையில் விவாதிக்கப்படும் என நம்புகிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 1000 Rs Scheme: கலைஞர் உரிமைத் தொகை: உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா? இதை பண்ணுங்க முதல்ல!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)