Amazon Employment | ஆண்டுக்கு ரூ.67 லட்சம் சம்பளம்; விவசாயியின் மகனுக்கு சிகப்புக் கம்பளம் விரித்தது அமேசான்..!
அவ்னீஷ் போன்றோரின் வாழ்க்கை இளைஞர்களுக்கு ஓர் சிறந்த முன்னுதாரணம். எந்தச் சூழ்நிலையையும் மீறி கல்வி கற்றலில் உறுதியாக இருந்தால் அது நிச்சயமாக பலனளிக்கும் என்பது அவ்னீஷ் ஒரு பெஸ்ட் ரோல் மாடல்.
ஹரியானா மாநிலம் சோனிபட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.67 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. இந்த இலக்கை எட்ட அந்த இளைஞர் நீண்ட கடுமையான பாதையைக் கடந்து வந்திருக்கிறார். சோனிபட் வட்டத்திலுள்ளது கிராவேரி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஓர் ஏழை விவசாயியின் மகன்தான் அவ்னீஷ் சிக்காரா. அவ்னீஷ் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கூட எப்போதும் கல்வியில் நாட்டம் கொண்டவராக இருந்தார்.
அவர் கல்விப்பசியைப் போக்கவே விவசாயியான தந்தை கூடுதல் வருமானத்துக்காக அவ்வப்போது லாரி ஓட்டுநராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். பள்ளிப்படிப்பை முடித்த அவ்னீஷ், மூர்தாலில் உள்ள தீன்பந்து சோட்டு ராம் அறிவியல் தொழில்நுப்டக் கல்லூரியில் பயின்றார். கல்லூரிப் படிப்பைத் தொடர மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். கல்விக் கட்டணத்தைச் செலுத்த பகுதி நேரமாக மாலை வேளைகளில் பாடம் கற்பித்தல் பணியையும் செய்துவந்தார். இது குறித்து அவ்னீஷ் கூறுகையில், ”எனது கல்லூரித் தேர்வு கட்டணத்தை செலுத்தக்கூட பணமில்லாமல் அவதிப்பட்ட காலங்கள் இருந்தன. அதனால், ஒருகட்டத்தில் நான் சுயமாக சம்பாத்தியம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். பகுதி நேரமாக மாலை வேளைகளில் டியூஷன் எடுத்தேன்” என்றார்
கல்லூரி முடித்துவிட்டு 10 மணிநேரம் வரை படிப்பேன். எனது உழைப்பு வீண் போகவில்லை. கடந்த ஊரடங்கின் போது அமேசானில் இன்டர்ன்ஷிப் செய்ய வாய்ப்பு கிடைத்தது. மாதம் ரூ.2.40 லட்சம் ஊதியம் பயிற்சிகால பணப் பலன் கிடைத்தது. எனது பயிற்சிக்காலம் முடிந்ததுமே எனக்கு ஆண்டுக்கு ரூ.67 லட்சம் ஊதியத்தில் அமேசான் நிறுவனம் வேலை கொடுத்துள்ளது. இது ஆண்டுக்கு ரூ.1 கோடி வரை செல்லும் என உயரதிகாரிகள் தெரிவித்தனர் என்று கூறினார். இது குறித்து தீன்பந்து சோட்டு ராம் அறிவியல் தொழில்நுப்டக் கல்லூரியின் துணைவேந்தர் பேராசிரியர் ஆயாநாத் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், "மிகவும் பின்தங்கிய குடும்பப் பின்னணி கொண்ட அவ்னீஷ் மிகப்பெரிய உயரத்தை எட்டியுள்ளதில் மகிழ்ச்சி. அவர் தனது கடுமையான இடையராத உழைப்பால் இந்த இலக்கை அடைந்துள்ளார். அவரின் முயற்சிக்குக் கிடைத்த பலன் இது. இதை மற்ற மாணவர்களும் உத்வேகமாக முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு இதுபோன்று போராட்டங்களாலும் முனைப்பாலும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்" என்று கூறியுள்ளார். மேலும், அவ்னீஷ் தங்களின் பல்கலைக்கழகத்துக்கு பெருமை சேர்த்துவிட்டதாகவும் அவர் நெகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.
அவ்னீஷ் போன்றோரின் வாழ்க்கை இளைஞர்களுக்கு ஓர் சிறந்த முன்னுதாரணம். எந்தச் சூழ்நிலையையும் மீறி கல்வி கற்றலில் உறுதியாக இருந்தால் அது நிச்சயமாக பலனளிக்கும் என்பது அவ்னீஷ் ஒரு பெஸ்ட் ரோல் மாடல்.