Sonia Gandhi All party Meeting | ’அவசர அனைத்துக் கட்சிக்கூட்டம்’ - சோனியா காந்தி கோரிக்கை..
இந்தியாவின் கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு மோடி அரசாங்கம் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் இதுவரை இந்தியாவில் 4.14 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒரே நாளில் 3,900 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர் - சோனியா காந்தி
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது. காணொளி மூலம் நிகழ்ந்த இந்தக் கூட்டத்தில், ‘பிரதமர் மோடி உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும்’ என்று சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
காங்கிரஸின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, ‘பெருந்தொற்றைக் எதிர்கொள்வதை மேலும் வலுப்படுத்த நாடாளுமன்ற குழு ஒன்றை கூட்டவேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், ‘இந்தியாவின் கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு மோடி அரசாங்கம் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் இதுவரை இந்தியாவில் 4.14 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒரே நாளில் 3,900 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இது பேரிடர் சூழல். உடனடியாக நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தை இதுதொடர்பாகக் கூட்டவேண்டும். அரசின் கொரோனாவுக்கு எதிரான ஒருங்கிணைந்த செயல்பாடுகளை அவர்கள் உறுதிப்படுத்தவேண்டும். அரசு கட்டமைப்புச் செயலிழந்துவிடவில்லை ஆனால் இந்தியாவின் பலத்தையும் வளத்தையும் ஆக்கப்பூர்வமாக ஒருங்கிணைத்து உபயோகிக்க மோடி அரசு தவறிவிட்டது.’ என்றார்.
கூட்டத்தில் மேலும் பேசிய சோனிய காந்தி, ‘ஆக்சிஜன், மருந்து மற்றும் வெண்டிலேட்டர்கள் தடையற்ற விநியோகத்தை உறுதிப்படுத்த அரசு தவறிவிட்டது. தேவையான எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை இறக்குமதி செய்யவில்லை. இதற்கிடையே தேவையில்லாத மக்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காத மத்திய விஸ்டா போன்ற அரசு திட்டங்களுக்காக பல ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளார்கள். இதன்மூலமாக மோடி அரசு தன்னுடைய தார்மீகக் கடமைகளிலிருந்தும் பொறுப்புகளிலிருந்தும் தவறிவிட்டது. நாடாளுமன்றக் குழு, தேசிய செயற்குழு என பலரது முன்னெச்சரிக்கைகளையும் அரசு அலட்சியம் செய்துவிட்டது. இவர்களுடைய தடுப்பூசி திட்டம் லட்சக்கணக்கான பழங்குடியினர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களை ஓரங்கட்டுவதாக உள்ளது ’ எனக் குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகு முதன்முறையாகக் கூடிய இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் பேரிடர் நிவாரண சேவைகளில் தாமே முன்வந்து தம்மை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார். காங்கிரஸ் கட்சி மாநில மற்றும் மாவட்ட வாரியாகச் செயல்படுத்தி வரும் கண்ட்ரோல் ரூம் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பேரிடர் காலத்தில் இளைஞர் காங்கிரஸின் செயல்பாடுகளைத் தனியே குறிப்பிட்டு சோனியா காந்தி பாராட்டினார். தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் இந்தக் கூட்டத்தில் முதன்முறையாகக் கலந்துகொண்டார்.
Also Read: அதிமுகவிலிருந்து வந்த 8 பேருக்கு திமுகவில் அமைச்சர் பொறுப்பு