Sonia Gandhi: உத்தராகண்ட், உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் பதவி விலக சோனியா காந்தி உத்தரவு !
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடுமையான தோல்வியை அடைந்தது.
![Sonia Gandhi: உத்தராகண்ட், உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் பதவி விலக சோனியா காந்தி உத்தரவு ! Sonia Gandhi asked PCC Presidents of UP, Uttarakhand, Punjab, Goa & Manipur to put in their resignations: Randeep Surjewala Sonia Gandhi: உத்தராகண்ட், உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் பதவி விலக சோனியா காந்தி உத்தரவு !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/15/e7e5c18b825db74597082c006c0d8e62_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உத்தரபிரதேசம், உத்தராகண்ட், கோவா,பஞ்சாப், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு கடந்த மாதம் முதல் தேர்தல் பல கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலின் முடிவுகள் கடந்த 10ஆம் தேதி வெளியானது. இதில் பஞ்சாப் தவிர பிற மாநிலங்களில் பாஜக சிறப்பான வெற்றியை பெற்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடுமையான தோல்வியை அடைந்தது.
இந்நிலையில் இந்தத் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது பலரும் விமர்சனத்தை தெரிவித்து வந்தனர். இந்தச் சூழலில் உத்தரபிரதேசம், கோவா, உத்தராகண்ட், மணிப்பூர்,பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களின் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5 மாநிலத் தேர்தல்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி நாடு முழுவதும் உள்ள 31 மாநிலங்களுள் 18 மாநிலங்களில் ஆளுங்கட்சியாகப் பொறுப்பு வகிக்கிறது. அருணாச்சலப் பிரதேசம், அசாம், பீகார், கோவா, குஜராத், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தராகாண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக மற்றும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சுமார் 50 சதவிகிதத்திற்கும் மேலான பகுதிகளில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் கைவசம் சத்திஸ்கர் மாநிலம் மட்டுமே தனித்து ஆட்சியில் இருக்கிறது. பிற மாநிலங்களான ஜார்க்கண்ட், மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றிருக்கிறது காங்கிரஸ் கட்சி. ஆம் ஆத்மி கட்சி டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை அமைத்துள்ளது. `காங்கிரஸ் இல்லாத இந்தியாவை அமைப்போம்’ எனக் கூறி கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது பாஜக. அதன்பிறகு, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு இறங்குமுகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 5 மாநில தேர்தல் முடிவிற்கு பிறகு இந்த தோல்வி தொடர்பாக கடந்த13ஆம் தேதி காங்கிரஸ் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், சோனியா காந்தியே காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர்வார் என்று தீர்மானிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)