Soli Sorabjee Death: முன்னாள் தலைமை வழக்கறிஞர் சோலி சொராப்ஜி மரணம்
Soli Sorabjee Death: நாட்டின் பேச்சுரிமை மற்றும் வெளிபடுத்தும் (எழுத்துரிமை) உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர்
இந்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் சோலி சொராப்ஜி காலமானார். அவருக்கு வயது 91 . கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார்.
1930 இல் பிறந்த சோலி சொராப்ஜி 1953 ஆம் ஆண்டில் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் பணியைத் தொடங்கினார். அதன்பின், 1971 ஆம் ஆண்டில் இந்திய உச்சநீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இந்தியாவின் தலைமை வழக்கறிஞராக இரண்டு முறை பணிபுரிந்தவர்.
நாட்டின் பேச்சுரிமை மற்றும் வெளிபடுத்தும் (எழுத்துரிமை) உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர். வாழ்நாள் முழுவதும் நாட்டின் பத்திரிக்கை சுதந்திரம் காக்கப்பட வேண்டி போராடியவர்.
மேனகா காந்தி எதிர் இந்திய அரசு (ஏ.ஐ.ஆர் 1978, எஸ். சி. 597) வழக்கு, எஸ். ஆர். பொம்மை எதிர் இந்தியன் யூனியன் (S. R. Bommai V. Union of India, வழக்கு எண் 1994 AIR 1918) உள்ளிட்ட வழக்குகளில் பெரும் பங்கு ஆற்றினார்.
கேசவாநந்த பாரதி வழக்கில் சோலி சொராப்ஜியின் பங்கு பெரிய அளவில் இருந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஒரு கட்சியின் உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் அரசிற்கே ஆதரவு அளித்தாலும் கூட அவர்களால் ஒரு குறிப்பிட்ட எல்லையை மீறி அரசியலமைப்புச் சட்டங்களை மாற்ற முடியாது என்பதை இந்த வலிமை மிகுந்த தீர்ப்பு தெளிவுபடுத்தியது.
சிறந்த மனித உரிமை வழக்கறிஞரான இவரை, 1997 ஆம் ஆண்டில் நைஜீரியாவிற்கான சிறப்பு அறிக்கையாளராக ஐ.நா நியமித்தது.
இந்திய அரசியலமைப்பு சட்டங்களுக்கு அவர் ஆற்றிய பங்கினை அடையாளப்படுத்தும் விதமாக இந்தியாவின் இரண்டாவது பெரிய விருதான பத்ம விபூசன் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
The Laws of Press Censorship in India (1976) , The Emergency, Censorship and the Press in India, 1975-77 (1977), Law and Justice (2004) உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.
இவரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர், குடியரசு துணை தலைவர், பாரத பிரதமர் உள்ளிட்டோர் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “ சோலி சொரப்ஜி மிகச் சிறந்த வழக்கறிஞரும், அறிஞருமாவார். வறியவர்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், சட்டத்தின் மூலம் உதவுவதில் முன்னணியில் இருந்தார். இந்தியாவின் அட்டார்னி ஜெனரலாக அவர் ஆற்றிய அரும்பணிக்கு என்றும் நினைவு கூரப்படுவார். அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.