"எந்த சாதிக்கும் எதிரானது இல்ல" சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக பேசிய சித்தராமையா
கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு பல்வேறு சாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதற்கு ஆதரவாக பேசியுள்ளார் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா. வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்வதை சாதிவாரி கணக்கெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

எந்த ஒரு சாதியையும் குறிவைக்கும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார். வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்வதை சாதிவாரி கணக்கெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்புக்கு கடும் எதிர்ப்பு:
கடந்த 2015ஆம் ஆண்டு, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, சமூகப் பொருளாதாரக் கல்வி ஆய்வறிக்கை என்ற பெயரில் சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வினை நடத்தியது. எச். காந்தராஜு தலைமையிலான மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், இந்த தரவுகளை சேகரிக்க தொடங்கியது. இதற்கான களப்பணி 2018 ஆம் ஆண்டு முடிவடைந்த போதிலும், இறுதி அறிக்கை 2024ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம்தான் முடிக்கப்பட்டது.
கர்நாடக அரசியலில் தொடர் ஆதிக்கத்தை செலுத்தி வரும் வொக்கலிகா, லிங்காயத் சமூகத்தினர், இந்த ஆய்வறிக்கைக்கு தொடர் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதேபோல, கர்நாடக எதிர்க்கட்சி தலைவரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆர். அசோகா, கர்நாடக மாநில பாஜக தலைவர் பி. ஒய் விஜயேந்திராவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
"உண்மையான சமூக நீதி"
இந்த நிலையில், சாம்ராஜ்நகர் மங்களாவில் கனக பவன் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, "சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் உண்மையான சமூக நீதி அடையப்படவில்லை. எனவே, விளிம்புநிலை சமூகங்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் நிலைமையை நன்கு புரிந்துகொள்ள இதுபோன்ற ஒரு கணக்கெடுப்பு அவசியம் தேவை.
இந்த கணக்கெடுப்பு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. ஆனால், முன்னாள் முதலமைச்சர்கள் எச்.டி. குமாரசாமி, பி.எஸ். எடியூரப்பா மற்றும் பசவராஜ் பொம்மை ஆகியோர் அதை ஏற்கவில்லை. நான் இப்போது அறிக்கையை ஏற்றுக்கொண்டு அமைச்சரவை முன் சமர்ப்பித்துள்ளேன்.
கூட்டுறவுத் துறையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் கோருகின்றனர். நீங்கள் அரசியலமைப்பை எதிர்த்த பாஜகவின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள். இந்த பிரச்னையை எடியூரப்பாவிடமோ அல்லது பிரகலாத் ஜோஷியிடமோ எழுப்பினீர்களா?
நீங்கள் எனக்காக கைதட்டி, சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்ப்பவர்களை ஆதரிப்பது துரதிர்ஷ்டவசமானது. உங்களுக்காக நிற்பவர்களுடன் நீங்கள் துணை நிற்க வேண்டும்" என்றார்.
கர்நாடகாவில் இதுவரை ஆட்சி செய்த 23 முதலமைச்சர்களில் 16 பேர், வொக்கலிகா மற்றும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்கள். அந்த அளவுக்கு கர்நாடக அரசியல், இந்த இரண்டு சமூகத்தை சுற்றிதான் சுழல்கிறது. குறிப்பாக, லிங்காயத் சமூகத்தை சேர்ந்த 9 பேர், கர்நாடக முதலமைச்சராக இருந்துள்ளனர்.
கர்நாடகாவில் தாங்கள்தான் அதிக எண்ணிக்கையில் இருக்கிறோம் என இந்த இரண்டு சமூகத்தவரும் தொடர்ந்து கூறி வந்த நிலையில், இவர்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமூகப் பொருளாதாரக் கல்வி ஆய்வறிக்கை என்ற ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார் சித்தராமையா.





















