Shirdi Saibaba Temple : சாய்பாபா பக்தர்களுக்கு அதிர்ச்சி...காலவரையின்றி மூடப்படுகிறதா ஷீரடி கோயில்? நடந்தது என்ன?
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள், ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.
மகாராஷ்டிராவின் முக்கிய வழிபாட்டு தலமான ஷீரடி சாய் பாபா கோயில், வரும் மே 1 ஆம் தேதி முதல் காலவரையின்றி மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாய்பாபா பக்தர்களுக்கு அதிர்ச்சி:
சாய் பாபா கோயிலின் பாதுகாப்பிற்காக அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்த அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோயில் நிர்வாகம் கோயிலை மூடும் முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோயிலின் பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்ய மத்திய தொழில் பாதுகாப்பு படை போதுமானதாக இல்லை என கோயில் நிர்வாகம் நம்புவதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.
காலவரையின்றி மூடப்படுகிறதா ஷீரடி கோயில்?
மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடி என்ற நகரத்தில், சாய்பாபாவின் மிக முக்கியமான கோயில் உள்ளது. இந்த சிறிய நகரம் நாட்டின் பிரபல சுற்றுலா தலமாக திகழ்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள், ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.
அகமதுநகர் - மன்மாட் நெடுஞ்சாலையில்தான் சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையால் இந்த கோயில் நிர்வகிக்கப்படுகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு, ஷீரடி விமான நிலையத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு (CISF) வழங்கப்பட்டது. இந்த சூழலில், சாய்பாபா கோயிலைப் பாதுகாக்கும் பொறுப்பும் CISFக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இருப்பினும், கோயில் நிர்வாகம் இந்த முடிவுக்கு ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளது. கோயிலுக்கு தேவைப்படும் தனித்துவமான பாதுகாப்பு ஏற்பாடும், சவால்களை சமாளிப்பதற்கான பொருத்தமான பயிற்சியும் அனுபவமும் CISF-க்கு இல்லை என கோயில் நிர்வாகம் கருதுகிறது.
கோயில் வளாகத்தின் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் பொறுப்பு, ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையிடம் உள்ளது. இலவச உணவு, தங்குமிடம், பிற வசதிகளையும், கோயில் நிர்வாகம் வழங்கி வருகிறது. அதுமட்டும் இன்றி, சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையின் கீழ் தொண்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இந்தியாவில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு பிறகு, சீரடிக்கு தான் அதிகம் பேர் வருவதாக முக்கிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய ரயில்வே நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு ரயில்களை சீரடிக்கு இயக்குகிறது. 'சைனகர் சீரடி ரயில் நிலையத்தை' இந்தியாவின் எந்த மூலையிலிருந்தும் எளிதாக அடைய முடியும். இந்தியாவின் கிழக்கில் உள்ள பூரியிலிருந்து மேற்கில் சீரடிக்கு வெறும் 24 மணி நேரத்தில் பயணிக்க முடியும்.
சாய் பாபா பூவுலகைவிட்டு மறைந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சீரடியில் உள்ள சாய் பாபா கோயில் 1922 ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.