(Source: ECI/ABP News/ABP Majha)
Muslim Wedding at Temple: இந்து கோயிலில் திருமணம் செய்துகொண்ட இஸ்லாமியர்கள்.. இமாச்சலில் நெகிழ்ச்சி!
Muslim Wedding at Temple:சமூகத்தில் மதநல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், சிம்லாவைச் சேர்ந்த ஒரு இந்து கோவிலில் இஸ்லாமிய ஜோடி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
‘இந்திய நாடு ஒற்றுமையான நாடு’ என நம் சிறு வயதிலிருந்து அனைவருக்கும் பள்ளிக் கல்வியின்போது தவறாமல் பயிற்றுவிக்கப்படுவது உண்டு. இருந்தாலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு மதத்தினருக்கு இடையே பூசல்கள் ஏற்படுவதுண்டு, சமயங்களில் கைகலப்புகளும் நேர்வதுண்டு. இவ்வகையான சம்பவங்களை தடுக்கும் வகையில், ஒரு நிகழ்வுதான் சிம்லா மாவட்டத்தைச் சேர்ந்த ராம்பூர் என்ற பகுதியில் நிகழ்ந்துள்ளது.
இந்து கோயிலில் திருமணம் செய்துகொண்ட இஸ்லாமியர்கள்:
வடஇந்திய மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லா மாவட்டத்தில் ராம்பூர் என்ற பகுதியில் சத்ய நாராயண கோயில் அமையப் பெற்றுள்ளது. இந்த கோயில், விஷ்வ இந்து ஹரிபிரசாத் மற்றும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் ஆகிய அறக்கட்டளைகளின் சார்பில் நடத்தப்படுகிறது.
சிம்லாவில் உள்ள இந்த சத்ய நாராயண கோவிலில் எம்.டெக் பட்டதாரியான பெண் ஒருவரும், சிவில் இஞ்சினியரிங் படித்த பட்டதாரி ஒருவரும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்க நடைபெற்ற திருமணம்:
சிம்லாவில் நடைபெற்ற இந்த திருமணத்தில், மணமகன்-மணமகள் வீட்டாரைச் சேர்ந்த உறவினர்கள் கலந்து கொண்டு, இத்திருமணத்தை சிறப்பாக நடத்தினர். இந்த திருமணம், மௌலவி (ஷரியத் என்ற இஸ்லாமிய சட்டத்தில் பட்டம் பெற்றவர்) மற்றும் வழக்கறிஞர் ஒருவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
சமூகத்தில் வாழும் பொது மக்களிடையே சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், சகோதரத்துவத்தை மேம்படுத்தும் வகையிலும் இந்த திருமணத்தை இந்து கோயிலில் இஸ்லாமிய முறைப்படி நடத்தியதாக திருமண ஜோடிகளின் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய சத்ய நாராயண கோவிலின் நிர்வாகி, விஷ்வ இந்து பரிஷாத் மற்றும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் ஆகிய இரண்டு அறக்கட்டளைகளும் இந்த கோவிலை நடத்துவதாகவும், அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக பல முறை குற்றம் சாற்றப்படுவதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இப்போது இந்த கோவிலில் இஸ்லாமியர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது, சனாதன தர்மத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக திகழும் வகையிலும் இருக்கும் எனவும் தெரிவித்தார்.
Also Read:Gujarat Earthquake: குஜராத்தில் இன்று காலை ஏற்பட்ட லேசான நிலநடுக்கம்.. பீதியில் மக்கள் ..
மணமகளின் தந்தை:
மணமகளின் தந்தை மகேந்திர சிங் மாலிக், இந்த திருமணத்தை நடத்திய கோயில் நிர்வாகத்தினர் அனைவரும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்ததாக தெரிவித்தார். இதனால், ராம்பூர் மக்களுக்கு சகோதரத்துவம் குறித்த நல்ல புரிதல் ஏற்படும் எனவும் அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், எம்.டெக் பட்டதாரியான அவரது மகள் தனது படிப்பில் தங்கப்பதக்கம் வென்றவர் என்றும் கூறி பெருமிதம் கொண்டார்.
மக்களின் கருத்து:
சிம்லாவில் நடைபெற்ற இந்த சம்பவத்தால், நாடு முழுவதும் உள்ள மக்கள் ஆனந்தம் அடைந்துள்ளனர். அதே சமயத்தில், இந்த திருமணம், பல மதவாதிகளை வாயடைக்க செய்துள்ளது என்ற கருத்தும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. ட்விட்டர் இணையதளத்தில் இது குறித்து காரசாரமான விவாதங்களில் ஈடுபட்டுள்ள நெட்டிசன்கள், இந்து கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது போல, இஸ்லாமியர்களின் கோயிலில் இந்துக்களின் திருமணம் நடைபெற வாய்ப்புகள் உள்ளதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க:Bihar : வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்; வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - பீகார் காவல் துறை எச்சரிக்கை!