Shankaracharyas: "அவரு ராமர் சிலைய தொடுவாரு, நான் கைய தட்டிட்டு இருக்கணுமா" சங்கராச்சாரியார்கள் அட்டாக்
ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்வதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, சங்கர மடத்தை சேர்ந்த சங்கராச்சாரியார்கள், இதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.
அயோத்தி விவகாரம் தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. அயோத்தியில் மசூதி இருந்த நிலமானது, பகவான் ராம் லல்லாவுக்கு சொந்தம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக இஸ்லாமியர்களுக்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, ராமர் கோயிலின் முதற்கட்ட கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. இதற்கிடையே, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.
அயோத்தி ராமர் கோயில்:
கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்வதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, சங்கர மடத்தை சேர்ந்த சங்கராச்சாரியார்கள், இதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.
அரைகுறையாக கட்டுப்பட்டுள்ள ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாகவும் அரசியல் லாபத்திற்காக கோயில் கும்பாபிஷேக விழாவை விஷ்வ இந்து பரிஷத் கையில் எடுத்துள்ளதாகவும் இந்து மதத் தலைவர்கள் விமர்சித்துள்ளனர். ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ள பூரி சங்கராச்சாரியார் சுவாமி நிச்சலானந்த சரஸ்வதி, "கோயிலில் சிலையை தொட்டு பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்வார், நான் அங்கு சென்று கை தட்டு கொண்டு இருக்க வேண்டுமா?
அயோத்தியில் பிரதமரே அனைத்தையும் செய்துவிட்டால் மதகுருமார்களுக்கு செய்வதற்கு மிச்சம் என்ன இருக்கிறது என்பதை மக்கள் யோசிக்க வேண்டும். சனாதன தர்மத்தை மதிப்பதற்கும் மதச்சார்பற்ற தலைவராக பிரதமர் தன்னை சித்தரித்து கொள்ளாமல் இருப்பதற்கும் பாராட்டுகள். ஆனால், மதகுருமார்கள் செய்யும் யோகாவையும் பிரதிஷ்டை விழா முதற்கொண்டு அனைத்தையும் பிரதமரே செய்துவிடுகிறார்" என்றார்.
மோடிக்கு எதிராக கொந்தளித்த சங்கராச்சாரியார்கள்:
இதே கருத்தை முன்வைக்கும் உத்தரகாண்ட் சங்கராச்சாரியார் சுவாமி அவி முக்தீஸ்வரானந்த் சரஸ்வதி, "அரசியல் லாபத்திற்காக மட்டுமே அரைகுறையாக கட்டுப்பட்டுள்ள ராமர் கோயில் திறக்கப்படுகிறது. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பாரம்பரியத்தை பின்பற்றவில்லை.
இந்தியாவை பொறுத்தவரையில் மன்னர்களும் மதகுருமார்களும் வேறு வேறு ஆட்களாகவே இருந்துள்ளனர். ஆனால், தற்போது, அரசியல் தலைவர், மதத்தின் தலைவராக ஆக்கப்பட்டுள்ளார். இது பாரம்பரியத்துக்கு எதிரானது. அரசியல் லாபத்திற்காக செய்யப்படுகிறது" என்றார்.
இதற்கு பதிலடி தந்துள்ள விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவரும் ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளருமான சம்பத் ராஜ், "ராமர் கோயில், ராமானந்த் பிரிவை சேர்ந்தவர்களுக்கே சொந்தம். சங்கராச்சாரியார்களோ சைவர்களோ சொந்தம் கொண்டாட முடியாது" என்றார்.