Rahul Gandhi : ஆங்கிலேயர்களை கண்டு அஞ்சிய சாவர்க்கர்.. நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் ராகுல் காந்தியின் அதிரடி பதில்..
"மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் வல்லபாய் படேல் ஆகியோர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்த போதிலும், அவர்கள் மன்னிப்பு கடிதத்தை எழுதவில்லை" என ராகுல் காந்தி பேசியுள்ளார்.
இந்துத்துவ கொள்கையாளரான சாவர்க்கர் மீது காங்கிரஸ் கடும் விமர்சனங்களை மேற்கொண்டு வருகிறது. சுதந்திர போராட்ட காலத்தில், ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த விவகாரத்தில் ராகுல் காந்தி வெளிப்படையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
ஆனால், மகாராஷ்டிராவில் காங்கிரஸின் கூட்டணி கட்சியான உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சாவர்க்கர் மீது அளவு கடந்த மதிப்பு வைத்திருப்பதாக கூறு வருகிறது. இந்த விவகாரம், தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
மகாராஷ்டிராவில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது, ஆங்கிலேயர்களிடம் சாவர்க்கர் வழங்கிய மன்னிப்பு கடிதத்தின் நகலை ராகுல் காந்தி காண்பித்தார்.
Rahul Gandhi with all the homework on Savarkar 🔥🔥pic.twitter.com/UCfRLYBmhz
— Amock (@Politics_2022_) November 17, 2022
அந்த கடிதத்தில், "உங்களது கீழ்படிந்துள்ள பணியாளர் நான் என்பதை மன்றாடி சொல்லி கொள்கிறேன்" என சாவர்க்கர் குறிப்பிட்டுள்ளார். "இந்த கடிதத்தை எழுதியதன் காரணம் என்ன? அச்சம்தான் காரணம். ஆங்கிலேயர்களை கண்டு அஞ்சியுள்ளார்" என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கூட்டணி கட்சிகளுடனான முரண்பாடு குறித்து பேசிய ராகுல் காந்தி, "யாராவது தங்கள் சித்தாந்தத்தை முன்வைக்க விரும்பினால், அவர்கள் அதை செய்ய வேண்டும். இந்தக் கடிதத்தை சாவர்க்கர் எழுதியது பற்றிய எனது நிலைபாடு இதுதான். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் வல்லபாய் படேல் ஆகியோர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்த போதிலும், அவர்கள் மன்னிப்பு கடிதத்தை எழுதவில்லை.
இவை இரண்டு சித்தாந்தங்கள் சம்பந்தபட்டவை. திறந்த விவாதத்திற்கு எங்கள் கட்சி எப்போதும் ஆதரிக்கும். எங்களிடம் சர்வாதிகாரிகள் இல்லை" என்றார்.
வாஷிமில் நடந்த பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் நினைவு விழாவில் பேசிய ராகுல் காந்தி, "ஆங்கிலேயர்கள் அவருக்கு நிலம் வழங்கிய போதிலும், [பிர்சா முண்டா] தலைவணங்க மறுத்தார். அவர் மரணத்தைத் தேர்ந்தெடுத்தார். காங்கிரஸ், அவரை தலைவராக கருதுகிறது. ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து ஓய்வூதியம் வாங்கிய சாவர்க்கரைதான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவராக கருதுகிறது" என்றார்.
ராகுல் காந்தி தெரிவித்த கருத்து ஆதரவாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய சிங், "இது நிதர்சனம்: ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கேட்டு, நாட்டை ஆங்கிலேயர்களுக்கு விற்றவர் சாவர்க்கர். இதையும் நான் சொல்லதான் செய்வேன்" என்றார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, " ராகுல் காந்தி கூறியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. வீர் சாவர்க்கரை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அதே நேரத்தில், நீங்கள் எங்களிடம் கேள்வி கேட்கும்போது, ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் ஏன் ஆட்சியில் இருந்தார்கள் என்பதையும் பாஜக சொல்ல வேண்டும்" என்றார்.