Governor On Patel : 'இந்தியாவ ஒன்னா சேர்த்தது படேல்.. ஆனா, எல்லா பெருமையும் சங்கராச்சாரியாருக்குதான்' - ஆளுநர் பேச்சு
இந்தியாவை படேல் ஒன்றுபடுத்தி இருந்தாலும், அதன் பெருமையாவும் சங்கராச்சாரியாருக்குத்தான் சேரும் என கேரள ஆளுநர் ஆரிஃப் கான் தெரிவித்துள்ளார்.
படேலின் ”ஒற்றுமைக்கான சிலை”:
ஆங்கிலேயரின் பிடியிலிருந்து 1947-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றபோது, இந்தியா 500-க்கும் மேற்பட்ட மாகாணங்களாக பிரிந்து கிடந்தன. அதைதொடர்ந்து, விடுதலைக்கு பிறகான இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேல் மேற்கொண்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மூலம், பிரிந்து கிடந்த மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு இந்திய நாடு முழு வடிவம் பெற்றது.
இதன் காரணமாகவே வல்லபாய் படேல் இந்தியாவின் இரும்பு மனிதர் என வர்ணிக்கப்படுகிறார். அதனை குறிப்பிடும் விதமாகவே குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள படேலின் 182மீ உயர சிலைக்கு, ஒற்றுமைக்கான சிலை என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
எல்லா பெருமையும் சங்கராச்சாரியாருக்கே - ஆரிஃப் கான்:
இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனத்தின் பேட்டியில் பேசிய கேரள ஆளுநர் ஆரிஃப் கான், படேல் இந்தியாவை ஒன்றிணைத்தாலும் அதன் பெருமை யாவும் சங்கராச்சாரியாரையே சேரும் என பேசியுள்ளார். அந்த பேட்டியில். அரசியல் ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு என்பதெல்லாம் சமீபகால நிகழ்வுகள்தான் எனவும், பல லட்சம் ஆண்டுகளாக நாம் அரசியல் ரீதியாக துண்டு துண்டாக பிளவுபட்டுக்கிடந்தோம் எனவும் கூறினார். இந்தியாவின் சிறந்த மாநிலங்களில் ஒன்றாகத் திகழும், கேரள மாநிலத்துக்கென்று மாபெரும் கலாசாரம் இருக்கிறது. இதற்கான பெருமை, கேரள சமூகத்திற்கும், நாராயண குரு போன்ற கேரள மக்களுக்கும்தான் சேரும் என பராட்டினார்.
ஆன்மீக ரீதியில் ஒற்றுமையை ஏற்படுத்திய சங்கராச்சாரியார்:
அதேநேரம், பெண்கள் மேலாடைகள் அணிய அனுமதி இல்லை என்கிற அளவுக்கு, கேரளாவில் கடுமையான ஒடுக்குமுறைகள் இருந்ததாகவும் கூறினார். விடுதலைக்கு பின்னர் பிரிந்து கிடந்த மாகாணங்களை சர்தார் வல்லபாய் படேல் ஒன்றுபடுத்தியதால், இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாக முடிந்தது. ஆனால், நாம் ஒரே நாடாக முடிந்ததற்கான உண்மையான பெருமை கேரளாவில் பிறந்த இம்மண்ணின் மைந்தரான சங்கராச்சாரியாருக்குத்தான் போக வேண்டும். அவர்தான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்திய மக்களுக்கு அவர்களது கலாசார, ஆன்மீக ஒற்றுமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என, ஆரிஃப் முகமது கான் தெரிவித்தார். ஆதி சங்கரர் என்று அழைக்கப்படும் சங்கராச்சாரியார் கி.பி 788-ல், கேரளாவின் காலடி பகுதியில் பிறந்தார். சிறந்த அறிஞர், முனிவர் மற்றும் அத்வைத தத்துவத்தின் விரிவுரையாளராகவும் திகழ்ந்துள்ளார்.
ஆரிஃப் கானும், சர்ச்சைகளும்:
படேலின் பிறந்தநாளான அக்டோபர் 31-ஆம் தேதியை நாட்டின் ஒற்றுமைக்கான தினம் என, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு அறிவித்து கொண்டாடி வருகிறது. இந்நிலையில், அதற்கு நேர்மாறாக கேரள ஆளுநர் ஆரிஃப் கன் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ஆரிஃப் கான் கேரளாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டது முதலே, அவருக்கும் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிப்பது தொடங்கி, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது வரை, பல்வேறு விவகாரங்களிலும் அரசுக்கும், ஆளுநருக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.