Saif Ali Khan: அச்சச்சோ..! நடிகர் சயிஃப் அலிகானுக்கு 6 இடங்களில் கத்திகுத்து, நள்ளிரவில் நடந்தது என்ன? பாலிவுட் திரையுலகம் ஷாக்
Saif Ali Khan: நடிகர் சயிஃப் அலிகான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம், பாலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Saif Ali Khan: நடிகர் சயிஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சயிஃப் அலிகானுக்கு கத்தி குத்து
மும்பை பாந்த்ராவில் (மேற்கு) உள்ள பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கானின் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையன் அவரை கத்தியால் குத்தியதில் நடிகர் காயம் அடைந்தார். வியாழக்கிழமை அதிகாலை 2:30 மணியளவில் சயிஃப் அலி கான் தனது மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தததாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்தவர்கள் விழித்தெழுந்ததையடுத்து, கொள்ளையன் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளர். பாந்த்ரா போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர், மேலும் குற்றவாளியை பிடிக்க தனிப்படை குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான சயிஃப் அலிகான் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், பாலிவுட்டை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
6 காயங்கள்:
லீலாவதி மருத்துவமனையின் சிஓஓ டாக்டர் நிரஜ் உத்தாமணி கூறுகையில், “சயிஃப் அவரது வீட்டில் அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டார். அதிகாலை 3:30 மணிக்கு லீலாவதிக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு ஆறு காயங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு ஆழமானவை. காயங்களில் ஒன்று அவரது முதுகெலும்புக்கு அருகில் உள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வருகிறோம். நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் நிதின் டாங்கே, காஸ்மெடிக் அறுவை சிகிச்சை நிபுணர் லீனா ஜெயின் மற்றும் மயக்க மருந்து நிஷா காந்தி ஆகியோர் அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர். அறுவைசிகிச்சைக்குப் பிறகுதான் பாதிப்பு எவ்வளவு என்பது தெரியவரும்” என தெரிவித்துள்ளார். மேலும், சயிஃபின் கழுத்தில் மற்றொரு காயம் இருப்பதாகவும், அதுவும் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும் டாக்டர் உத்தாமணி தெரிவித்தார்.
காவல்துறை சொல்வது என்ன?
சம்பவம் தொடர்பாக பேசிய முத்த காவல்துறை அதிகாரி, “சயிஃப் அலிகான் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். கொள்ளையனுடன் ஏற்பட்ட மோதலில் அவர் கத்தியால் குத்தப்பட்டாரா அல்லது காயமடைந்தாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சம்பவம் தொடர்பாக மும்பை குற்றப்பிரிவும் இணை விசாரணை நடத்தி வருகிறது” என தெரிவித்துள்ளார்.
சயிஃப் அலிகான் குடும்ப விவரம்:
சயிஃப் அலி கான் 1993 இல் பரம்பரா எனும் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தில் சஹ்தா ஹை, ஓம்காரா மற்றும் தன்ஹாஜி உள்ளிட்ட பல்வேறு படங்களில் தோன்றியுள்ளார். பட்டோடி குடும்பத்தில் பிறந்த இவர் நடிகை ஷர்மிளா தாகூர் மற்றும் கிரிக்கெட் வீரர் மன்சூர் அலி கான் ஆகியோரின் மகனாவார். 2012 ஆம் ஆண்டு கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டு, மும்பையின் பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள சத்குரு ஷரன் விட்டில் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு தைமூர் (8) மற்றும் ஜெஹ் (4) என இரண்டு மகன்கள் உள்ளனர்.