Sabarimala Temple: சபரிமலையில் தொடங்கியது மண்டல பூஜை..! 40 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே இன்று அனுமதி..!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று அதிகாலை 4 மணியளவில் மண்டல பூஜை தொடங்கியது. மண்டல பூஜையை முன்னிட்டு இன்று 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
கேரளாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இதையடுத்து பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா தொற்றுக்குப் பின் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முழுவதுமாக தளர்த்தப்பட்டுள்ளதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தரிசனம் செய்யும் பக்தர்களை உடனடியாக சன்னிதானம் பகுதியில் இருந்து பக்தர்களை வெளியேற்ற காவல்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நாள்தோறும் 90 ஆயிரம் வரை பக்தர்கள் தரிசனம் செய்து வருவதாக கூறப்படும் நிலையில் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு நடைமுறை பின்பற்றப்படுகிறது.
29 லட்சம் பக்தர்கள் தரிசனம்
நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி நடை திறக்கப்பட்டு 39 நாட்களில் (நேற்று முன்தினம் வரை) 29 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதில் 20 சதவீதம் பேர் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ரூ.222 கோடியை 98 லட்சத்து 70 ஆயிரித்து 250 வருமானம் கிடைந்துள்ளது. இதில் காணிக்கையாக ரூ.70 கோடியை 10 லட்சத்து 81 ஆயிரத்து 986 வசூலானது தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
இன்று மண்டல பூஜை
தங்க அங்கி சன்னிதானத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து நேற்று மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை. அதன்பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், மண்டல பூஜைக்காக இன்று அதிகாலை காலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகிறது.
களபாபிஷேகத்திற்கு பிறகு நண்பகல் 12.30 மணி முதல் 1 மணி வரை தந்திரி கண்டர ரூராஜீவரு தலைமையில் மண்டல சிறப்பு பூஜை நடைபெறும். இரவு 10 மணிக்கு நடைசாத்தப்பட்டு, மண்டல பூஜை நிறைவு பெறுகிறது. மேலும், இன்று நடைபெறும் மண்டல பூஜைக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை வருகிற 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். மகர ஜோதி தரிசனம் 14-ஆம் தேதி நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

