சபரிமலை: புல்மேடு பாதை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! ஸ்பாட் புக்கிங் குறைப்பு, பாதுகாப்பு குறித்த முக்கிய தகவல்!
சபரிமலை செல்லும் பக்தர்கள் அழுதை பாதையில் சிறப்பு பாஸ் வழங்கும் எந்த திட்டமும் தற்போது இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு விழாவை முன்னிட்டு கடந்த 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஐயப்பனுக்கு மாலை அணிந்து, கடும் விரதங்களை கடைப்பிடித்து, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தரத் தொடங்கினர். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதாக தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆனால், ஆன்லைன் முன்பதிவு கிடைக்காத நிலையில், நேரடியாக ஸ்பாட் புக்கிங் மூலம் வர முயன்ற பக்தர்களின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்தது. ஸ்பாட் புக்கிங் மூலம் வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உயர்ந்ததால், குடிநீர், கழிப்பறை, ஓய்விடம், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட முறையாக வழங்க முடியாமல் கோவில் நிர்வாகம் கடும் சிரமத்தை சந்தித்தது. இந்த விவகாரம் கேரள உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு சென்றதை தொடர்ந்து, நீதிமன்றத்தின் ஆலோசனையின் பேரில் ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை முதலில் 5,000 ஆக குறைக்கப்பட்டது. அதன் பின்னர், தற்போது தினசரி தரிசன எண்ணிக்கை 90,000 பக்தர்களாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தற்போது சபரிமலையில் கூட்ட நெரிசல் ஓரளவு குறைந்துள்ளதாகவும், பக்தர்கள் பெரும் சிரமமின்றி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பல பக்தர்கள், பம்பை வழியாக ஆன்லைன் முன்பதிவு கிடைக்காத நிலையில், மாற்றுப் பாதையாக புல்மேடு வழியை தேர்வு செய்து வருகின்றனர். இதனால் இந்த பாதையில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. புல்மேடு பாதை என்பது சுமார் 16 கிலோமீட்டர் நீளமான, செங்குத்தான ஏற்ற இறக்கங்கள் நிறைந்த காட்டுப்பாதை ஆகும். இந்த பாதையில் சிறுவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களை அழைத்து வருவது கடும் சிரமமாக இருப்பதாகவும், சில சமயங்களில் காட்டுப்பகுதியில் சிக்கிக் கொள்வோர் எண்ணிக்கையும் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் தீயணைப்பு துறையினர், மத்திய அதிவிரைவுப் படை மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தேவசம் போர்டு அதிகாரிகள் கூறுகையில், "பக்தர்களின் பாதுகாப்பே எங்களின் முதன்மை. புல்மேடு பாதை மிகவும் கடினமானது. எனவே வயது முதிர்ந்தவர்கள் மற்றும் சிறு வயது பக்தர்கள் இந்த பாதையை தவிர்ப்பது நல்லது. இனி தினமும் 1,000 பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங் கூப்பன் வழங்கப்படும். எருமேலியிலிருந்து அழுதை வழியாக வரும் பெருவழிப்பாதையில் சிறப்பு பாஸ் வழங்கப்படுவதாக பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை. இதுகுறித்த கோரிக்கைகள் வந்துள்ளன. ஆனால் கேரள உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைப்படி மட்டுமே இறுதி முடிவு எடுக்கப்படும்" என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.





















