சபரிமலை ஐயப்பன் கோயில்: மகரஜோதி தரிசனத்தில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்! முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. ஜனவரி 14-ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள். திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், கடந்த 27ம் தேதி மண்டல பூஜை முடிந்து இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அதன் பின்னர் நேற்று மாலை 5:00 மணிக்கு புதிய மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஸ்ரீ கோயில் நடைதிறந்து தீபம் ஏற்றினார். அதை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் நடத்தினர். இரவு 11.00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி மகேஷ் மோகனரரு ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து கணபதி ஹோமம், உஷ பூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைற்றது.
எல்லா நாட்களிலும் காலை 3:30 முதல் 11:00 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். ஜனவரி 14- ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக 11-ல் அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் எருமேலியில் நடைபெறுகிறது. ஜனவரி 12-ல் பந்தளத்தில் இருந்து திருபாரணம் புறப்படும். மகரஜோதி தரிசனத்துக்காக பக்தர்களின் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் 13 மற்றும் 14 தேதிகளில் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்களிலும் 30 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் அனுமதிக்கப்படுவர். ஸ்பாட் புக்கிங் இரண்டாயமாக குறைக்கப்படும் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
வழக்கமாக நாளொன்றுக்கு 70,000 பக்தர்கள் வரை சபரிமலையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வரும் சூழலில், மகர ஜோதி அன்று 35,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ இன்னும் வெளியிடப்படவில்லை. மகரவிளக்கு பூஜைக்குப் பிறகு பக்தா்கள் 19-ஆம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்யலாம். தொடா்ந்து, ஜனவரி 20-ஆம் தேதி பந்தளம் அரச குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்துக்குப் பின் கோயில் நடை அடைக்கப்படும்.





















