சபரிமலை ஐயப்பன் கோயில்: பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! நேர மாற்றம், வனத்துறை எச்சரிக்கை! முக்கிய அப்டேட்!
சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் மீண்டும் அதிகரித்துள்ளதால் மதியம் மற்றும் இரவில், கோவில் நடை திறந்திருக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தையொட்டி மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயிலில் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை கடந்த 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சாமி கோயிலில் 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து, கருப்பு உடை அணிந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் வரிசையில் நின்று சரண கோஷம் முழங்க 18 படி ஏறி ஐயப்பனை வழிபடுவர்.
இந்த நிலையில், இந்த வருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை திறந்து, 25 நாட்களை கடந்துள்ளது. வார கடைசி நாட்களான சனி, ஞாயிறு கிழமைகளை தவிர்த்து, மற்ற எல்லா நாட்களிலும் கூட்டம் மிக அதிகமாக உள்ளது. மர கூட்டத்திலிருந்து நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டி உள்ளது. ஐந்து முதல் ஏழு மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர் .நடை அடைக்கும் போது பக்தர்கள், 18ம் படி ஏற்றப்பட்டு வடக்கு வாசல் வழியாக வெளியே அனுப்பப்படுகின்றனர். இவர்கள் மீண்டும் சில மணி நேரம் வரிசையில் நின்று தான் சுவாமி தரிசனம் செய்ய வேண்டி உள்ளது.
இதனால் போலீசார் மற்றும் தேவசம் போர்டு அதிகாரிகள் தந்திரியுடன் ஆலோசனை நடத்தி, மதியம் மற்றும் இரவு நேங்களில் கோவில் நடை அடைக்கும் நேரத்தை நீட்டித்துள்ளனர். இதன்படி மதியம், 1 மணிக்கு உச்ச பூஜை முடிந்து அடைக்கப்பட வேண்டிய நடை, 1:30 மணி வரையும், இரவில், 11:00 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைப்பதற்கு பதிலாக, 11:15 மணி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.கோவிலின், 18 படிகளில் ஒரு நிமிடத்திற்கு, 80 பக்தர்கள் ஏற்றப்படுகின்றனர். தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள, 45 நிமிடங்களில் கூடுதலாக, 3,500 பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். அரையாண்டு தேர்வுகள் முடிந்தபின் மேலும் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், காவல் அதிகாரிகள் பல முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.
குறிப்பக சபரிமலைக்கு புல்மேடு வழியாக செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் உரக்குழி அருவி பகுதிக்கு செல்வதை தவிர்க்கும்படி வனத்துறை எச்சரித்துள்ளது. சபரிமலை வருவதற்கு சாலக்கயம் - பம்பை, எருமேலி - பம்பை, சத்திரம் - புல் மேடு -சன்னிதானம் என மூன்று பாதைகள் உள்ளது. இதில் புல்மேடு பாதை சபரிமலைக்கு வரும்போது செங்குத்தான ஏற்றமே இல்லாத பாதையாகும். மாறாக முழுமையாக செங்குத்தான இறக்கம் ஆகும். நடப்பு மண்டல காலம் தொடங்கிய பின்னர் ஏராளமான பக்தர்கள் புல் மேடு பாதை வழியாக சன்னிதானம் வந்துள்ளனர். பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், இப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் உரக்குழி அருவி பகுதிக்கு செல்வதை தவிர்க்கும்படி வனத்துறை எச்சரித்துள்ளது.





















