சபரிமலை: ஒரு மாதத்தில் 26 லட்சம் பக்தர்கள் தரிசனம்! கூட்டம் அதிகரிக்கும், முன்பதிவு விவரம் இதோ!
மண்டல, மகர விளக்கு பூஜைக்காலம் தொடங்கிய நவம்பர் 16 முதல் டிசம்பர் 16ம் தேதி வரையிலான இந்த ஒரு மாதத்தில் மட்டும் 26 லட்சத்து 81 ஆயிரத்து 460 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
சபரிமலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 26 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் 16ம் தேதி மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டது. ஐயப்பனுக்கு விரதம் மேற்கொண்டு மாலை அணிந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள், நாள்தோறும் லட்சக்கணக்கில் சபரிமலைக்கு வருகை தந்து ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில், சபரிமலையில் மண்டல மகர விளக்கு பூஜைக்காலம் தொடங்கிய நவம்பர் 16 முதல் டிசம்பர் 16ம் தேதி வரையிலான இந்த ஒரு மாதத்தில் மட்டும் 26 லட்சத்து 81 ஆயிரத்து 460 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
பம்பை வழியாக பயணித்து 25,60,297 பேர் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளனர். பாரம்பரிய கானக பாதைகளான எருமேலி, அழுதகடவு வழியாக 46,690 பக்தர்களும், சத்ரம் புல்லுமேடு வழியாக 74,473 பக்தர்களும் சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர். இந்த பூஜை காலத்தில் அதிகபட்சமாக டிசம்பர் 8ம் தேதி 1,01,844 பக்தர்களும், நவம்பர் 24 ம் தேதி 1,00,867 பக்தர்களும் சாமி தரிசனம் செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்து வரும் நாட்களில், இந்த தினசரி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சபரிமலையில் தற்போது தினசரி 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
எருமேலி பாதை வழியாக தினசரி 1500 முதல் 2500 பக்தர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். புல்மேடு வழியாக 4 முதல் 5 ஆயிரம் பக்தர்கள் சபரிமலைக்கு வருகிறார்கள். இதனிடையே, சபரிமலை தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு (தினசரி 70 ஆயிரம் பக்தர்கள்) ஜனவரி 10ம் தேதி வரை நிறைவடைந்துள்ளது. உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தினசரி 10 முதல் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். நடப்பு சீசனையொட்டி, மண்டல பூஜை வருகிற 27ம் தேதியும், மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் 14ம் தேதியும் நடக்கவுள்ளது.
சபரிமலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த, மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால், பக்தர்கள் பயமின்றி ஐயப்பனை தரிசிக்கலாம் என தேவசம் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் முன்பதிவு செய்த நாளில் தரிசனத்திற்கு வர வேண்டும். மேலும் வருகிற 26 மற்றும் 27-ந் தேதிக்கான உடனடி தரிசன முன்பதிவுக்கான எண்ணிக்கை கேரள உயர் நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















