கூடலூர் ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு.. விதிமுறைகள் என்ன?
கூடலூரில் `டி23’ என்று பெயரிடப்பட்டிருக்கும் புலி, மனிதரைக் கொன்றுள்ள நிலையில், தமிழ்நாடு தலைமை கானுயிர் கண்காணிப்பாளர் சேகர் குமார் நீரஜ் அதனை கொல்வதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் `டி23’ என்று பெயரிடப்பட்டிருக்கும் புலி ஒன்று, மனிதர்களை கொன்றுள்ள நிலையில், தமிழ்நாடு தலைமை கானுயிர் கண்காணிப்பாளர் சேகர் குமார் நீரஜ் அதனை வேட்டையாடி கொல்வதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். முதுமலை புலிகள் காப்பகத்தின் அருகில் இருக்கும் சிங்காரா பகுதியில் இதுவரை நான்கு மனிதர்களை இதே புலி கொன்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மனிதர்களை வேட்டையாடும் புலிகளைப் பிடிப்பதற்காகவும், தேவை இருப்பின் கொல்வதற்காகவும் விதிமுறைகள் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி புலிகளையும், மனிதர்களையும் முதலில் காக்கும் விதமாக தடுப்பு முயற்சிகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்படி, கானுயிர் பாதுகாப்புச் சட்டம் கூறியுள்ளதன் அடிப்படையில், மனித விலங்கு மோதல் ஏற்படாதவாறு புலிகளுக்குத் தேவையான இடம் காட்டில் ஒதுக்கப்பட வேண்டும். புலிகள் பாதுகாப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும். அப்பகுதியில் வாழும் மக்களுக்குப் புலிகள் பாதுகாப்பு குறித்தும், சூழலியல் பாதுகாப்பு குறித்தும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
புலிகளால் அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் கால்நடை விலங்குகளின் இழப்பு குறித்து அதிகாரிகள் தகவல்கள் பரிமாற்றத்தில் தொடர்ந்து ஈடுபடுவதோடு, பாதிக்கப்படும் மக்களுக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும். புலிகளின் நடமாட்டத்தை நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கிராம மக்கள் வாழும் பகுதிகளில் நிரந்தரமாக புலிகளோ, சிறுத்தைகளோ குடியேறாமல் இருக்கும் விதமாக அப்பகுதி மக்கள் கால்நடைகள் இறந்தால் அவற்றைப் பாதுகாப்பாகப் புதைக்கும் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.
புலிகள் மனிதர்களை வேட்டையாடுவதற்கும் மனிதர்களை உண்பதற்கும் பல வித்தியாசங்கள் உண்டு. புலிகள் மனிதர்களைத் தேடித் தேடி கொல்வதற்கும், கெடுவாய்ப்பாக மனிதர்களை உண்பதற்குமான சம்பவங்கள் வெவ்வேறானவை. பெண் புலி தனது குட்டிகளைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் போதும், உறக்கத்தில் இருக்கும் புலிகளை மனிதர்கள் எழுப்பிவிடும் போதும், மனிதர்களைப் பிற விலங்குகள் எனப் புலிகள் கருதும் போதும், மனிதர்களைப் புலிகள் உண்கின்றன. முதல் மனிதனைப் புலிகள் கொன்ற பிறகு, அவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மனிதன் கொல்லப்பட்ட இடத்தின் அடிப்படையில், புலியின் நடமாட்டம் கணக்கிடப்பட்டு, அடுத்தடுத்த மனிதக் கொலைகள் ஏற்படும் போது, புலிகளைக் கூண்டுகளை வைத்தோ, மயக்க மருந்து செலுத்தியோ பிடிக்கும் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.
மனிதர்களை வேட்டையாடும் புலிகளைக் கொல்வதற்கு அனுபவம் வாய்ந்த மூத்த வனப்பிரிவு அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. பிற வேட்டையாளர்களுக்கு இந்த அனுமதியை அளித்து, மனிதர்களை வேட்டையாடாத புலிகளைக் கொல்லும் வாய்ப்புகளும் இருப்பதால், இந்த அனுமதி பிறருக்கு அளிக்கப்படுவதில்லை. எனினும் மலைப்பகுதிகளில் தேர்ந்த வேட்டையாளர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டு, அவருடன் வனப்பிரிவு அதிகாரிகள் பயணிக்க விதிமுறைகள் விதிக்கப்படுவதோடு, அதற்கான செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்ளும்.
புலிகளைக் கொல்வதற்காக எந்த சன்மானமும் யாருக்கும் வழங்கப்படாது. இவ்வாறு மத்திய அரசு மனிதர்களை வேட்டையாடும் புலிகளைக் கொல்வதற்கான விதிமுறைகளை விதித்துள்ளது.