ஆஸ்.எஸ்.எஸ் புத்தகங்களை படிப்பது கட்டாயம்? சர்ச்சையை கிளப்பும் பாஜக அரசின் முடிவு!
ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் எழுதிய புத்தகங்களைத் தங்கள் பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் மத்தியப் பிரதேச பாஜக அரசு உத்தரவு பிறப்பித்தது.
பாஜக அரசு எடுக்கும் முடிவுகள் தொடர் சர்ச்சையை கிளப்பி வருகின்றன. வேளாண் சட்டம் (தற்போது ரத்து செய்யப்பட்டுவிட்டது) தொடங்கி சமீபத்தில் உத்தரகாண்டில் அமல்படுத்தப்பட்ட மாநில பொது சிவில் சட்டம் வரை பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
தொடர் சர்ச்சையை கிளப்பும் பாஜக அரசின் முடிவு: உத்தரப் பிரதேசத்தில் 'லவ் ஜிகாத்'க்கு ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் மாநில பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட சட்டம் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியது. இந்த நிலையில், மத்தியப் பிரதேச பாஜக அரசு சர்ச்சைக்குரிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகள், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர்கள் எழுதிய புத்தகங்களைத் தங்கள் பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு உயர்கல்வித் துறையின் மூத்த அதிகாரி டாக்டர் திரேந்திர சுக்லா எழுதியுள்ள கடிதத்தில், 88 புத்தகங்கள் கொண்ட தொகுப்பை வாங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
சுரேஷ் சோனி, தினாநாத் பத்ரா, டி அதுல் கோத்தாரி, தேவேந்திர ராவ் தேஷ்முக் மற்றும் சந்தீப் வாஸ்லேகர் போன்ற ஆஸ்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களால் எழுதப்பட்ட படைப்புகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
கட்டாயமாகிறதா ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் புத்தகங்கள்? மத்தியப் பிரதேச உயர் கல்வித்துறை பிறப்பித்த இந்த உத்தரவு பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கல்விப்பிரிவான வித்யாபாரதியின் முன்னாள் பொதுச் செயலாளரும் ஆர்.எஸ்.எஸ்-ன் கல்வி தொடர்பான திட்டங்களில் முக்கியப் பிரமுகராக விளங்கும் தினாநாத் பத்ரா எழுதிய 14 புத்தகங்கள், உயர்கல்வித்துறை பரிந்துரைத்த பட்டியலில் இடம்பெற்றிருப்பது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
11 ஆம் வகுப்பு ஹிந்தி பாடப்புத்தகத்திலிருந்து புரட்சிகர பஞ்சாபி கவிஞர் அவதார் பாஷின் 'சப்சே கட்டக்' கவிதையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தவர் தினாநாத் பத்ரா ஆவார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் கே.கே. மிஸ்ரா, "அவர்களின் படைப்புகள் கல்வித் தகுதியைக் காட்டிலும் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தில் வேரூன்றியுள்ளன.
இப்படிப்பட்ட ஆசிரியர்களின் புத்தகங்கள் கல்வி நிலையங்களில் தேசபக்தியையும் தியாகத்தையும் தூண்டுமா? காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த உத்தரவு திரும்ப பெறப்படும்" என தெரிவித்தார்.