"ஆணவம் பிடித்தவர்கள் 241இல் நிறுத்திவிட்டனர்" - சீண்டும் ஆர்எஸ்எஸ்.. முற்றுகிறதா பாஜகவுடனான மோதல்?
பாஜகவை சீண்டும் வகையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருவது அரசியலில் புயலை கிளப்பி வருகிறது. ஆணவம் பிடித்தவர்களை பகவான் ராமர் 241இல் நிறுத்திவிட்டார் என இந்திரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே எதிர்பாராத அரசியல் நகர்வுகள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக அசுர பலத்துடன் ஆட்சி செய்து வந்த பாஜகவுக்கு இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை.
முற்றுகிறதா பாஜக - ஆர்.எஸ்.எஸ் மோதல்? கூட்டணி கட்சிகளின் ஆதரவோடுதான் ஆட்சி நடத்தி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், பாஜகவை சீண்டும் வகையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருவது அரசியலில் புயலை கிளப்பி வருகிறது. அதீத நம்பிக்கையின் காரணமாகவே தேர்தல் முடிவுகள் இப்படி அமைந்திருப்பதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ ஆங்கில நாளேடு 'Organiser' கருத்து தெரிவித்திருந்தது.
உண்மையான சேவகனுக்கு ஆணவம் இருக்காது என ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் தெரிவித்துள்ள கருத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆணவம் பிடித்தவர்களை பகவான் ராமர் 241இல் நிறுத்திவிட்டார் (மக்களவை தேர்தலில் 240 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது) என்றும் ராமரை எதிர்த்தவர்களை 234இல் நிறுத்திவிட்டார் (234 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது) என்றும் இந்திரேஷ் குமார் கூறியுள்ளார்.
தேசிய அரசியலில் செம்ம ட்விஸ்ட்: ராஜஸ்தான் மாநிலம் கனோடாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "2024இல், ஜனநாயகத்தில் ராம ராஜ்ஜியத்தின் சட்டப்பேரவையில் என்ன நடந்தது என்பதைப் பாருங்கள். ராமரை வழிபட்டவர்கள். ஆனால், படிப்படியாக ஆணவம் பிடித்தவர்களாக மாறியவர்கள் மிகப்பெரிய கட்சியாக ஆக்கப்பட்டனர்.
ஆனால், அவர்களின் ஆணவத்தால் அவர்களுக்கு தனிப்பெரும்பான்மை வழங்கப்படவில்லை. ராமரை எதிர்த்தவர்கள் அனைவரும் சேர்ந்து போதுமான பலத்தை திரட்ட முடியவில்லை. இது இறைவனின் நீதி. இது விசித்திரமான நிகழ்வு அல்ல.
ராமரை வணங்கிய ஆணவம் கொண்டவர்கள் 241 இல் நிறுத்தப்பட்டனர். ராமர் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் 234 இல் நிறுத்தப்பட்டனர். நம்பிக்கை கொள்ளாததால் உங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை. நீங்கள் வெற்றிபெற மாட்டீர்கள்.
ராமரை எதிர்ப்பவர்கள் தானாக கடவுளால் தண்டிக்கப்படுவார்கள். எனவே, லல்லு சிங்கை அடுத்த ஐந்தாண்டுகள் ஓய்வெடுக்குமாறு பகவான் ராமர் கூறி இருக்கிறார்" என்றார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அயோத்தியில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் லலன் சிங். அயோத்தி ராமர் கோயிலை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்த பாஜகவுக்கு பைசாபாத் தொகுதியில் அடைந்த தோல்வி பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் அரசியலமைப்பை மாற்றி விடுவேன் என கூறி சர்ச்சையில் சிக்கியவர் லலன் சிங். எனவே, பாஜக வெற்றி பெற்றால் அரிசயலமைப்பை மாற்றிவிடுவார்கள் என பிரச்சாரத்தை மேற்கொண்டது காங்கிரஸ். இது தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்தது.