51,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர்.. மோடி கொடுத்த சர்ப்ரைஸ்
அரசு துறைகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 51,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு காணொலிக் காட்சி மூலம் பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி.

வேலைவாய்ப்பு மேளாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு காணொலிக் காட்சி மூலம் பணி நியமன ஆணைகளை இன்று வழங்கினார்.
இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர்:
பின்னர், திரண்டிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, "மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இந்த இளைஞர்களுக்கான புதிய பொறுப்புகள் இன்றோடு தொடங்குகிறது. நாட்டின் பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்துதல், உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்துதல், நவீன உள்கட்டமைப்பை நிர்மாணிப்பதில் பங்களிப்பு செய்தல், தொழிலாளர்களின் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வருவது ஆகியவை அவர்களின் கடமைகளில் அடங்கும்.
அவர்கள் தங்கள் பொறுப்புகளை நேர்மையுடன் நிறைவேற்றும் தன்மை, வளர்ந்த நாடாக மாறுவதை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த இளைஞர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் தங்கள் கடமைகளை மேற்கொள்வார்கள்.
எந்தவொரு நாட்டின் முன்னேற்றம் மற்றும் வெற்றிக்கான அடித்தளம் அதன் இளைஞர்களின் கையில் உள்ளது. தேச நிர்மாணத்தில் இளைஞர்கள் தீவிரமாக பங்கேற்கும்போது, தேசம் விரைவான வளர்ச்சியை அனுபவித்து, உலக அரங்கில் அதன் அடையாளத்தை நிறுவுகிறது.
தங்களின் கடின உழைப்பின் மூலமும் புதிய கண்டுபிடிப்புகளின் மூலமும் இந்திய இளைஞர்கள் தங்கள் மகத்தான திறனை உலகிற்கு வெளிப்படுத்தி வருகின்றனர். நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலை வாய்ப்புகள் தொடர்ந்து வளர்ந்து வருவதை ஒவ்வொரு அடியிலும் அரசு உறுதி செய்கிறது.
பிரதமர் மோடி என்ன சொன்னார்?
திறன் இந்தியா, புத்தொழில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற முன்முயற்சிகள் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. இந்தப் பிரச்சாரங்கள் மூலம், இந்திய இளைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு திறந்த தளத்தை அரசு வழங்குகிறது.
இந்த முயற்சிகளின் விளைவாக, கடந்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்பம், தரவு, கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில் இந்திய இளைஞர்கள் நாட்டை முன்னணிக்கு கொண்டு வந்துள்ளனர்" என்றார்.
யுபிஐ, அரசு இ-சந்தை போன்ற டிஜிட்டல் தளங்களின் வெற்றியை எடுத்துரைத்த அவர், இது டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களை இளைஞர்கள் எவ்வாறு வழிநடத்துகிறார்கள் என்பதை நிரூபிக்கிறது. நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியா தற்போது உலகிலேயே முன்னணியில் உள்ளது என்றும், இந்த சாதனையில் கணிசமான பங்கு இளைஞர்களையே சாரும் என்றும் அவர் மேலும் கூறினார்.
"இந்தப் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உற்பத்தி இயக்கம், 'மேக் இன் இந்தியா' முன்முயற்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், இந்தியாவின் இளைஞர்களுக்கு உலகளவில் தரமான தயாரிப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது. இந்த முயற்சி நாடு முழுவதும் உள்ள கோடிக் கணக்கான எம்.எஸ்.எம்.இ மற்றும் சிறு தொழில்முனைவோருக்கு ஆதரவளிப்பது மட்டுமல்லாமல், நாடு முழுவதும் புதிய வேலை வாய்ப்புகளையும் வழங்கும்" என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.





















