Republic Day Tableau 2022: குடியரசுத் தின அணிவகுப்பில் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள்.. இதுதான் விதிமுறை!
Republic Day 2022: குடியரசுத் தின அணிவகுப்பில் இடம்பெறும் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் எப்படி தேர்வு செய்யப்படும்?
ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தினத்தின் போது டெல்லியில் கண்கவர் அணிவகுப்பு நடைபெறும். இந்த அணிவகுப்பில் ராணுவத்தின் முப்படையினர், டெல்லி காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு படைகள் பங்கேற்பார்கள். அவர்களுடன் சேர்ந்து ஒரு சில மாநில அலங்கார ஊர்திகள் மற்றும் மத்திய அமைச்சகத்தின் அலங்கார ஊர்திகள் ஆகியவை இடம்பெறுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இதில் சில மாநிலங்கள் இடம்பெறும். ஒரு சில மாநிலங்களின் ஊர்திகள் இடம்பெறாது.
இந்நிலையில் கடந்த மூன்று முறை தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம்பெற்று வந்த நிலையில் இம்முறை அது இடம்பெறவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில் குடியரசுத் தின அணிவகுப்பில் இடம்பெறும் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் எப்படி தேர்வு செய்யப்படும்?
மாநில அலங்கார ஊர்திகளுக்கான தேர்வு முறை என்ன?
குடியரசுத் தின விழா அணிவகுப்பில் இடம்பெறும் மாநில அலங்கார ஊர்திகளை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்யும். முதலில் குடியரசுத் தின அணிவகுப்பில் இடம்பெற உள்ள மாநில அலங்கார ஊர்திகளின் வடிவம் தொடர்பாக மாநிலங்கள் ஒரு பரிந்துரையை அனுப்ப வேண்டும். மாநிலங்களில் இந்த பரிந்துரைகளை ஆராய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒரு குழு அமைக்கும். அந்த குழுவில் கலை, இசை, சிறப்பகலை உள்ளிட்டவற்றில் தேர்ந்த நபர்கள் இடம்பெறுவார்கள். அவர்கள் முதலில் மாநிலங்களின் அலங்கார ஊர்தி வடிவங்களை ஆராய்ந்து அதில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களை கூறுவார்கள்.
அதன்பின்னர் மாநிலங்களின் பரிந்துரைகள் 3டி வடிவத்தில் அமைக்கப்படும். இந்த 3 டி மாடல்களை மீண்டும் அந்தக் குழு ஆராய்ந்து கடைசி கட்டமாக எந்தெந்த மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் இடம்பெறும் என்ற இறுதி முடிவை அறிவிக்கும். ஒவ்வொரு ஆண்டும் 15 அல்லது 16 மாநில அலங்கார ஊர்திகள் இடம்பெறும். மாநிலங்களுடன் சேர்ந்து மத்திய அமைச்சகங்களும் தங்களுடைய அலங்கார ஊர்திகள் தொடர்பான வடிவங்களை இந்தக் குழுவிற்கு அனுப்பும். அதிலிருந்து சில மத்திய அமைச்சகங்களின் அலங்கார ஊர்திகளும் குடியரசுத் தின அணிவகுப்பிற்கு தேர்வாகும். ஆகவே ஒரே மாநிலத்தின் அலங்கார ஊர்தி தொடர்ச்சியாக எல்லா ஆண்டும் இடம்பெறும் என்று கூறமுடியாது. இருப்பினும் ஒரு சில மாநிலங்களின் ஊர்திகள் தொடர்ந்து சில ஆண்டுகள் கூட இடம்பெறும் வாய்ப்பை பெறும்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நேரலையில் காண இங்கே க்ளிக் செய்யவும்
குடியரசுத் தின அணிவகுப்பில் இடம்பெறும் அலங்கார ஊர்திகளுக்கான விதிமுறைகள் என்னென்ன?
குடியரசுத் தின விழா அணிவகுப்பில் இடம்பெறும் அலங்கார ஊர்திகளுக்கு ஒரு சில விதிமுறைகள் உள்ளன. அதாவது அந்த அலங்கார ஊர்திகளில் மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் பெயர் மட்டுமே பலகையில் இடம்பெற்று இருக்க வேண்டும். மேலும் அந்த பலகையில் முன்பக்கத்தில் இந்தியிலும், பின் பக்கத்தில் ஆங்கிலத்திலும், இடது மற்றும் வலது புறங்களில் மாநில மொழியிலும் பெயர்கள் இடம்பெற்று இருக்க வேண்டும். மேலும் அந்த அலங்கார ஊர்திகளுடன் மொத்தம் 10 பேர் மட்டுமே வர முடியும். அவர்கள் அனைவரும் அந்தந்த ஊர்தியை சேர்ந்த மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசத்திலிருந்து மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும்.
மேலும் படிக்க: போதை! பலி கொடுக்கும் நேர்த்திக்கடனில் ஆட்டுக்கு பதிலாக ஆடு பிடித்திருந்தவர் தலை துண்டிப்பு!