உடலுறவில் ஈடுபட்ட பிறகு, சாதி வேறுபாட்டை சொல்லி திருமணத்தை மறுத்தால்... நீதிமன்றம் சொன்னது என்ன?
ஔரங்காபாத்தில் உள்ள மும்பை உயர்நீதிமன்ற அமர்வு அளித்துள்ள தீர்ப்பில் குற்றவாளி மீதான கிரிமினல் வழக்கு விசாரணையை ரத்து செய்ய முடியாது எனக் கூறியுள்ளது.
ஒடுக்கப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை காதலிப்பதாகவும் திருமணம் செய்வதாகவும் கூறி ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் ஏமாற்றுவது அடிக்கடி நடக்கும் தொடர்கதை. அது போன்ற சம்பவம் ஒன்றில் அண்மையில் மும்பை உயர்நீதிமன்றம் அப்படி ஏமாற்றுபவர்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது எனத் தீர்ப்பளித்துள்ளது. ஔரங்காபாத்தில் உள்ள மும்பை உயர்நீதிமன்ற அமர்வு அளித்துள்ள தீர்ப்பில் குற்றவாளி மீதான கிரிமினல் வழக்கு விசாரணையை ரத்து செய்ய முடியாது என்றும் அவர்மீதான குற்றச்சாட்டுகள் பாலியல் வன்கொடுமை மற்றும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.குற்றம்சாட்டப்பட்ட நபர் தொடர்புடைய பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி பாலியல் உறவுக்குச் சம்மதிக்க வைத்துள்ளார். பின்னர் அந்தப் பெண் ஒடுக்கப்பட்ட சமூகம் என்பதால் அவரைத் திருமணம் செய்ய முடியாது எனக் கூறி அவரைத் தட்டிக்கழித்ததாகத் தெரிய வந்துள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட கணேஷ் சூர்யவன்ஷி என்பவர் தன்மீதான விசாரணையை ரத்து செய்யக் கோரித் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் விஷ்வாஸ் ஜாதவ் மற்றும் சந்தீப் குமார் மோரே தலைமையிலான அமர்வு இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.
அரசுவழக்கறிஞர் தரப்பு வாதத்தின்படி கணேஷ் சூர்யவன்ஷி 2019 டிசம்பர் மாதத் தொடக்கத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணை இன்ஸ்டாகிராம சமூகவலைதளம் வழியாகச் சந்தித்துள்ளார். தொடக்கத்தில் நேரில் சந்திக்க மறுத்த அந்தப் பெண் வற்புறுத்தலின் பேரில் கணேஷை நேரடியாகச் சந்தித்துள்ளார். அப்படியான ஒரு சந்திப்பில் உடலுறவுக்கு இணங்கச் சொல்லிக் கேட்டுள்ளார். அந்தப் பெண் மறுத்துள்ளார். ஆனால் கணேஷ் தான் அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகவும் அதனால் உடலுறவுக்கு இணங்கும்படியும் கூறியுள்ளார். அந்தப் பெண் சம்மதித்த நிலையில் இது மார்ச் 2020 வரைத் தொடர்ந்துள்ளது. அதன் பின்னர் அந்தப் பெண்ணிடம் பேசுவதைத் தவிர்த்து வந்த கணேஷ், அந்தப் பெண் ஒடுக்கப்பட்ட சமூகம் என்பதால் அவரை திருமணம் செய்ய முடியாது எனக் கூறி மறுத்துள்ளார்.
இதுகுறித்து கருத்துக் கூறியுள்ள அமர்வு,’அந்தப் பெண் தொடக்கத்திலேயே தனது சாதியை கணேஷிடம் தெரிவித்துள்ளார் என்பது முதல் தகவல் அறிக்கை வழியாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து திருமணத்தைக் குறிப்பிட்டுதான் அந்தப் பெண்ணை அவர் உடலுறவுக்குச் சம்மதிக்க வைத்துள்ளார் என்பதும் தெளிவாகிறது. மேலும் அந்தப் பெண்ணை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் எனக் கூறி பிறகு அவர் தவிர்த்து வந்த காலத்தில் அவர்களிடையே உடல்ரீதியான உறவுமுறை எதுவும் இல்லை, அதனால் அவர் தவறான வாக்குறுதியின் அடிப்படையில்தான் அந்தப் பெண்ணைச் சம்மதிக்க வைத்துள்ளார் என்பதால் அவர் மீதான வழக்கு விசாரணையைத் தள்ளுபடி செய்ய முடியாது’ என குறிப்பிட்டுள்ளது.