"இந்தியாவுடன் விரைவில் இணையும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்" ராஜ்நாத் சிங் சூசகம்
இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இணையும் நாள் வெகு தொலைவில் இல்லை என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை குறிப்பிட்டு பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜத்நாத் சிங், "புவியியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எங்களிடமிருந்து பிரிந்து கிடக்கும் சகோதரர்கள் மீது முழு நம்பிக்கை உள்ளது" என்றார்.
"பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை"
இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் வர்த்தக உச்சி மாநாடு டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் ராஜத்நாத் சிங், பாகிஸ்தான் உடனான இந்தியாவின் கொள்கை நிலைபாடு குறித்து விவரித்தார். இதுதொடர்பாக விரிவாக பேசிய அவர், "இந்தியா தனது உத்தியையும் பயங்கரவாதத்திற்கான பதிலையும் மறுவடிவமைப்பு செய்து மறுவரையறை செய்துள்ளது.
பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக மட்டுமே இருக்கும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் எங்கள் சொந்தக்காரர்களாக உள்ளனர். எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதியினர் என்று நான் நம்புகிறேன்.
இன்று புவியியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நம்மிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கும் நமது சகோதரர்களும் ஒருநாள் அவர்களின் ஆன்மாவின் குரலைக் கேட்டு இந்தியாவின் பிரதான நீரோட்டத்திற்குத் திரும்புவார்கள் என்று நாங்கள் முழு நம்பிக்கை கொண்டுள்ளோம்.
என்ன சொன்னார் ராஜ்நாத் சிங்?
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்தியாவுடன் ஆழ்ந்த தொடர்பை கொண்டுள்ளார்கள். அவர்களில் சிலர் மட்டுமே தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர்.
இந்தியா எப்போதும் இதயங்களை இணைப்பது பற்றிப் பேசுகிறது. அன்பு, ஒற்றுமை மற்றும் உண்மையின் பாதையில் நடப்பதன் மூலம், நமது சொந்தப் பகுதியான பாகிஸ்தான் காஷ்மீர் திரும்பி வந்து, நான் இந்தியா, நான் திரும்பிவிட்டேன் என்று கூறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நாங்கள் நம்புகிறோம்.
பயங்கரவாதத்தால் ஏற்படும் செலவு சின்னதல்ல. அதற்கு பெரும் விலையைக் கொடுக்க வேண்டி இருக்கும் என்பதை பாகிஸ்தான் இப்போது உணர்ந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி ரூ.1,000 கோடிக்கும் குறைவாக இருந்தது. ஆனால், இப்போது அது ரூ.23,500 கோடியாக உயர்ந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இன்று, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் செழிப்பு என இரண்டிற்கும் மேக்-இன்-இந்தியா அவசியம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூரின் போது, நமது தளங்களும் அமைப்புகளும் தங்கள் வலிமையைக் காட்டியதால், இந்தியாவின் உள்நாட்டில் வளர்க்கப்பட்ட அமைப்புகள் முழு உலகையும் ஆச்சரியப்படுத்தின" என்றார்.





















