Rajivgandhi Case : "மாநில அரசுக்கு கட்டுப்பட்டவர்தான் ஆளுநர்" - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்
கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் தங்கள் விருப்பப்படி செயல்பட முடியாது. ஆனால், அமைச்சர்களின் ஆலோசனையின்படி செயல்பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளான எஸ். நளினி உள்ளிட்டோரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்ற 2018ம் ஆண்டு மாநில அமைச்சரவையின் பரிந்துரைக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளது.
ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற அமைச்சரவையின் பரிந்துரையின்படி செயல்படுவதற்குப் பதிலாக, ஆளுநர் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் வைத்திருந்த கோப்புகளை இறுதியாக ஜனவரி 2021ல் குடியரசு தலைவருக்கு அனுப்பியதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோசப் எஸ். அரிஸ்டாட்டில், "கடந்த ஓராண்டு ஒன்பது மாதங்களாக குடியரசுத் தலைவர் கூட எந்த முடிவையும் எடுக்கவில்லை. கடந்த 30 ஆண்டுகள், நான்கு மாதங்கள் மற்றும் 25 நாட்களாக நளினி, வேலூரில் உள்ள பெண்கள் சிறப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்" என்றார்.
Read Tamil Nadu government's reply affidavit here: https://t.co/7sDvzIzSFA#SupremeCourt
— Live Law (@LiveLawIndia) October 14, 2022
தமிழ்நாடு மாநில அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், "நளினி உள்பட ராஜீவ் படுகொலையில் தொடர்புடைய ஆறு ஆயுள் தண்டனைக் கைதிகளை அரசியலமைப்பு 161ஆவது பிரிவின் கீழ் முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழ்நாடு ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதில் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ஏ.ஜி.பேரறிவாளன் வழக்கும் அடங்கும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் தங்கள் விருப்பப்படி செயல்பட முடியாது. ஆனால், அமைச்சர்களின் ஆலோசனையின்படி செயல்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் தமிழ்நாடு அரசு மேற்கோள்காட்டியுள்ளது.
தீர்ப்பை மேற்கோள்காட்டிய தமிழ்நாடு அரசு தரப்பு, "ஆளுநர் என்பவர் மாநில அரசின் சுருக்கெழுத்தே ஆவார். ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்ளிட்ட குற்றவாளிகளின் குற்றங்கள் பொது ஒழுங்கின் கீழ் வருகிறது. இது மாநில அரசின் அதிகார வரம்பின் கீழ் வருகிறது" என தெரிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டு, செப்டம்பர் 9ஆம் தேதி அன்று வழங்கப்பட்ட அமைச்சரவைப் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரை காத்திருக்காமல், தங்களை உடனடியாக விடுவிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி, நளினி மற்றும் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த ரிட் மனுக்களை ஜூன் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. பேரறிவாளனை விடுதலை செய்தது போன்ற உத்தரவை பிறப்பிக்க சட்டப்பிரிவு 142இன் கீழ் அசாதாரண அதிகாரங்களைப் பயன்படுத்த முடியாது என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.