Tiger Raja : உயிரிழந்தது, நீண்ட நாள் உயிர் வாழ்ந்த புலி ராஜா.. மக்களின் அன்புக்கண்ணீர் சொல்லும் கதை..
இந்தியாவின் மிக வயதான புலி ராஜா இயற்கை எய்தியது. அதன் வயது 25. வடக்கு பெங்காலில் வசித்துவந்த இந்தப் புலி வயது மூப்பின் காரணமாக இன்று உயிரிழந்தது.
இந்தியாவின் மிக வயதான புலி ராஜா இயற்கை எய்தியது. அதன் வயது 25. வடக்கு பெங்காலில் வசித்துவந்த இந்தப் புலி வயது மூப்பின் காரணமா இன்று உயிரிழந்தது. கடந்த ஆகஸ்ட் 2008 ஆம் ஆண்டு ராஜா, வடக்கு வங்காளத்தில் உள்ள கைராபரி சிறுத்தை மறுவாழ்வு மையத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அங்கேயே பராமரிப்பில் இருந்த புலி இன்று உயிரிழந்தது.
ராஜா பராமரிப்பு மையத்திற்கு வந்த கதை:
இது குறித்து ஜல்டாபோரா டிவிஷனல் ஃபாரஸ்ட் ஆஃபீஸர் தீபக் கூறுகையில், ராஜாவை நாங்கள் காயமடைந்த நிலையில்தான் மீட்டோம். அதன் பின்னங்காலில் முதலை கடித்திருந்தது. சுந்தரவன சதுப்பு நிலக் காடுகளைச் சேர்ந்த வங்கத்து புலி வகையைச் சேர்ந்தது ராஜா. அங்கே புலிகளும், இதர விலங்குகளும், மனிதர்களும் முதலையால் தாக்கப்படுவது வாடிக்கையானது. அதேபோல் கொடிய பாம்புகள் தாக்கியும் இங்குள்ள விலங்குகள் உயிரிழப்பது வழக்கமானது. ராஜாவை மீட்கும்போது காயம் பலமாக இருந்தது. அதை நாங்கள் சிகிச்சையளித்து பராமரித்ததால் 15 ஆண்டுகள் கூடுதலாக வாழ்ந்துள்ளது. இல்லாவிட்டால் காயத்தினாலேயே அது உயிரிழந்திருக்கும். ராஜா தான் நாட்டிலேயே அதிக நாட்கள் உயிர் வாழ்ந்த புலி என்று அறியப்படுகிறது.
புலியின் இயல்பு என்ன?
புலி, ஆச்சரியமும் அச்சமும் ஒருசேர தரும் விலங்கு. காடுகளுக்குள் அவ்வளவு எளிதில் புலிகள் மனிதர்கள் கண்ணில் அகப்பட்டு விடாது. புலிகள் இயல்பாகவே கூச்ச சுபாவம் கொண்ட விலங்கு. தனக்கென ஒரு எல்லை வகுத்துக் கொண்டு தனியாக வாழும் விலங்கு. புலி இருக்கும் காடு செழிப்பான காடாக கருதப்படுகிறது. ஏனெனில் அதற்கு தேவையான இரை எங்கு கிடைக்குமோ அங்கு தான் புலி வாழும். புலி அதன் வேட்டையாடும் திறனுக்கு பெயர் பெற்றது என்றாலும், அதன் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையாது. இரைக்காக ஓடும் புலியை விட, உயிருக்காக ஓடும் மானுக்கு தேவை அதிகம் இருக்கும் அல்லவா?. ஒரு புலி மானை வேட்டையாடினால், உடனடியாக அதனை தின்றுவிடாது. சில நாட்களுக்கு வைத்து சாப்பிடும் குணம் கொண்டது. மனித வாசனையை நுகர்ந்தாலே புலி பல கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று விடும்.
ஆட்கொல்லியாக ஏன் மாறுகிறது?
இத்தகைய இயல்புகளை கொண்ட புலி, அவ்வளவு எளிதில் ஆட்கொல்லியாக மாறி விடாது என சூழலியல் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். புலிகள் ஆட்கொல்லியாக மாறுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக புலிகள் வேட்டையாடும் தன்மை குறையும்போது, கிராமங்களில் உள்ள வளர்ப்பு பிராணிகளை தாக்கி உண்ணத் துவங்கும். அத்தகைய சமயங்களில் எதேச்சையாக மனிதர்களை புலி வேட்டையாடி உண்டால், ஆட்கொல்லியாக மாற வாய்ப்புள்ளது. ஏனெனில் மனிதர்களை புலிகள் வேட்டையாடுவது மிகவும் எளிதானது. மனித வேட்டைக்கு பழகிய புலிகள் ஆட்கொல்லியாக மாறும் என்கின்றனர், சூழலியல் செயற்பாட்டாளர்கள்.