தனியார் நிறுவனத்தின் 10 பணியிடங்களுக்கு குவிந்த 1800 இளைஞர்கள் - குஜராத்தில் பரபரப்பு
குஜராத் மாநிலத்தில் தனியார் நிறுவனம் நடத்திய 10 காலிப்பணியிடங்களுக்கான நேர்காணலில் பங்கேற்க 1800 பேர் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குஜராத்தில் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ.க. அரசு நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுவதாக தொடர் குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், அந்த குற்றச்சாட்டுக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக இன்று அந்த மாநிலத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
10 காலிப்பணியிடங்களுக்கு குவிந்த 1800 இளைஞர்கள்:
குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது பாரூச். இங்குள்ள அங்க்லேஷ்வர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று வேலைவாய்ப்புக்கான நேர்காணலுக்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. 10 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அதற்கான நேர்காணல் கடந்த திங்கள்கிழமை நடைபெறும் என்று அறிவித்திருந்தது. நேர்காணலில் பங்கேற்க ஒரு தனியார் ஹோட்டலின் முகவரியையும் தெரிவித்திருந்தனர்.
இந்த வேலைக்கான நேர்காணலுக்கு சுமார் 50 பேர் வரை பங்கேற்பார்கள் என்று எதிர்பார்த்த நிறுவனத்திற்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால், இந்த வேலைக்கான நேர்காணலில் பங்கேற்க காலை முதலே நூற்றுக்கணக்கான இளைஞர்கள் குவியத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் சுமார் 1800 பேர் 10 காலிப்பணியிடங்களுக்கான நேர்காணலுக்கு குவிந்தனர். இதனால், அந்த தனியார் நிறுவனத்தினரும், நேர்காணல் நடைபெற்ற ஹோட்டல் நிர்வாகமும் திக்குமுக்காடினர்.
கீழே விழுந்த இளைஞர்கள்:
குஜராத் மாநிலத்தில் உள்ள குஜராத் தொழிற்சாலை வளர்ச்சித்துறை கழகம் அமைந்துள்ள ஜகாதியா பகுதியில் உள்ள பொறியியல் தொழிற்சாலையில் பணிபுரிவதற்கான இந்த நேர்காணல் நடைபெற்றுள்ளது. ஒரு கட்டத்தில் கூட்டம் அலைமோதியதால் நேர்காணல் நடைபெற்ற ஹோட்டலின் முன்பக்கம் இருந்த இரும்பு தடுப்பு கம்பிகள் உடைந்தது. அதில் இளைஞர்கள் சிலர் கூட்டம் தாங்காமல் ஏறி நிற்க, அப்போது அந்த இரும்பு தடுப்பு கம்பி உடைந்து விழுந்தது. இதனால், சுமார் 6 இளைஞர்கள் கீழே விழுந்தனர்.
இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை குறிப்பிட்டு அந்த மாநிலத்தின் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வை எதிர்க்கட்சியான காங்கிரஸ் மிகக்கடுமையாக விமர்சித்து வருகிறது. மாநிலத்தின் வேலையில்லா திண்டாட்டத்தை இது காட்டுவதாக விமர்சித்துள்ளது. நேர்காணல் நடத்திய தனியார் நிறுவனம் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளது.