Rahul Gandhi MK Stalin: பொது மருத்துவக் கல்வி - தமிழ்நாடு முன்னோடி மாநிலம் - ஸ்டாலினுக்கு ராகுல் நன்றி
பொது மருத்துவக் கல்வி முறையை கட்டமைப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பொது மருத்துவக் கல்வி முறையை கட்டமைப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி எழுதிய கடிதம்: இதுகுறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி எழுதிய கடிதத்தில், தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதற்கு நன்றி. தமிழ்நாட்டுக்கு விலக்கு கோருவது பற்றி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
தமிழ்நாட்டுக்கு புகழாரம் சூட்டிய ராகுல் காந்தி: அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசதியான சிலருக்கு மட்டும் வாய்ப்பு கிடைப்பதை தடுக்கும் கூட்டுக் கடமை நமக்கு உள்ளது. பொது மருத்துவக் கல்வி முறையை கட்டமைப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது. இதன் விளைவாக வலுவான பொது சுகாதார அமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார கட்டமைப்பை பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் கட்டாயம் கண்டிக்கப்பட வேண்டும். நீட் தேர்வு நமது உயர்கல்வி அமைப்பில் உள்ள அப்பட்டமான குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது. மத்திய அரசு, என்.டி.ஏவின் பெருந்தோல்வியால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களை சந்தித்தேன். 24 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும்” என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2024ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதனிடையே ஜூன் 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான 4ஆம் தேதி இரவே தேர்வு முடிவுகளும் வெளியாகின.
இதில் வழக்கத்துக்கு மாறாக 67 பேர் முதல் மதிப்பெண் பெற்றனர். சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என நீட் இளநிலைத் தேர்வில் ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின.